சென்னை:
இருங்காட்டுக்கோட்டை சிப்காட் அருகே கார் மீது லாரி மோதி விபத்துக்கு உள்ளானதில் கணவர் மற்றும் மருத்துவரான மகளை பறிகொடுத்த பெண்ணுக்கு ரூ. 1.60 கோடியை இழப்பீடாக வழங்க தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு சென்னை மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வில்லிவாக்கம் திருமலை நகர் பகுதியில் மருந்தகம் நடத்தி வந்தவர் பாஸ்கர் (61). இவரது மனைவி ஜோதிகா (49), சொந்தமாக பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார்.
மகள் ஷோபிகா (26), தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார்.
மூவரும் குடும்பத்துடன் ஏலகிரி சென்று விட்டு கடந்த 2023 மே 14-ம் தேதி சென்னைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். காரை அஸ்வின்குமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
அப்போது இரவு 9 மணியளவில் கார் பெங்களூரு – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் அருகே வந்து கொண்டிருந்தபோது சிப்காட்டில் இருந்து அதிவேகமாக நெடுஞ்சாலையில் புகுந்த சரக்கு லாரி, கார் மீது மோதியது.
இதி்ல் படுகாயமடைந்த பாஸ்கரும், அவரது மகள் ஷோபிகாவும் உயிரிழந்தனர். ஜோதிகாவும், கார் ஓட்டுநரும் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர்.
இந்நிலையில் இளம் மருத்துவரான தனது மகள் மற்றும் கணவரின் இறப்புக்கும், தனக்கு ஏற்பட்ட காயங்களுக்கும் ரூ.3 கோடி இழப்பீடு கோரி சென்னை மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் ஜோதிகா தனித்தனியாக 3 வழக்குகளைத் தொடர்ந்தார்.
இந்த வழக்குகளை விசாரித்த சென்னை சிறு வழக்குகளுக்கான முதன்மை நீதிமன்ற நீதிபதி ஏ.நசீர் அகமது, ‘இந்த விபத்து சரக்கு லாரி ஓட்டுநரின் கவனக்குறைவு, அலட்சியப் போக்கு மற்றும் அதிவேகத்தால் நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்த பெண் மருத்துவர் தனியார் மருத்துவமனையில் ரூ. 1.14 லட்சம் ஊதியம் வாங்கி வந்துள்ளார். மருந்தகம் நடத்தி வந்த பாஸ்கர் மாதம் ரூ. 50 ஆயிரம் சம்பாதித்துள்ளார். காயமடைந்த மனுதாரரான ஜோதிகாவும் தன் பங்குக்கு ரூ. 20 ஆயிரம் வரை சம்பாதித்து வந்துள்ளார்.
இந்த விபத்துக்கு கார் ஓட்டுநரின் அதிவேகமே காரணம் என்ற சரக்கு லாரி காப்பீடு செய்யப்பட்ட தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் வாதம் ஏற்புடையதல்ல.
மனுதாரர் இந்த விபத்தில் தனது மகள் மற்றும் கணவரை பறிகொடுத்ததுடன் மட்டுமல்லாது அவரும் 34 சதவீதம் அளவுக்கு ஊனமடைந்துள்ளார்.
எனவே அவரது மகளின் இறப்புக்கு ரூ. 1 கோடியே 29 லட்சத்து 89 ஆயிரத்து 800, கணவரின் இறப்புக்கு ரூ. 17 லட்சத்து 24 ஆயிரம், மனுதாரருக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு ரூ. 13 லட்சத்து 58 ஆயிரத்து 300 என மொத்தம் ரூ. 1 கோடியே 60 லட்சத்து 72 ஆயிரத்து 100–ஐ தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் 7.5 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளார்.