ஈரோடு
ஈரோடு திண்டல் வேலாயுதசாமி கோவிலில் ராஜகோபுரத்துடன் கூடிய மலைப்படிக்கட்டுகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அங்கு ஆசியாவிலேயே முதல் முறையாக 186 அடி உயரமுள்ள பிரமாண்ட முருகன் சிலை அமைக்கப்பட உள்ளது.
இதற்கான பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது ராஜகோபுரம் அமைக்கும் பணிகளையும், சிலை வைக்கப்பட உள்ள இடத்தையும் அவர்கள் பார்வையிட்டனர். பின்னர் பணிகளின் விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
அதன்பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் ஏராளமான கோவில்களில் திருப்பணிகள் நடந்து வருகிறது. இதில் இதுவரை 3 ஆயிரத்து 325 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு உள்ளது. இந்த எண்ணிக்கை இந்த ஆண்டு இறுதிக்குள் 3 ஆயிரத்து 500 ஆக அதிகரிக்கும். இதற்காக அரசின் சார்பில் ரூ.1,120 கோடி மானியமாக வழங்கப்பட்டு உள்ளது.
சுவாமிமலையில் 100 படிகள் உள்ளன. அங்கு முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் செல்ல சிரமப்படுகின்றனர். எனவே லிப்ட் அமைக்க ஏற்பாடு நடக்கிறது. மருதமலையில் புதிய பிரமாண்ட சிலை அமைக்கப்பட உள்ளது. அங்கு 110 படிகள் இருப்பதால், லிப்ட் அமைக்கும் பணி நடக்கிறது.
இந்த ஆட்சியில் கோவில்கள் சீரமைப்பு பணிக்காக ரூ.1,400 கோடி நன்கொடை வந்துள்ளது.
கடந்த எந்த ஆட்சியிலும் இதுபோன்ற தொகை வரவில்லை. சென்னிமலை முருகன் கோவில் மலைப்பாதை சீரமைப்பு தொடர்பாக கடந்த 20 நாட்களுக்கு முன்பு வனத்துறை அமைச்சர் கண்ணப்பன் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்.
இதற்கான அனுமதி பெறும் பணி விரைவுபடுத்தப்பட்டு உள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்பட்டு, இந்த ஆண்டு இறுதிக்குள் சாலைகள் அமைக்கும் பணி நிறைவு பெறும்.இவ்வாறு அவர் கூறினார்.