நேபாளத்தில் நடக்கும் கருட நாக யுத்தம்!!

திருமாலின் வாகனங்களில் ‘பெரிய திருவடி’ என்று அழைக்கப்படுபவர், கருட பகவான். இவரே திருமாலின் முதன்மையான வாகனமாக இருக்கிறார்.

அனைத்து ஆலயங்களிலும் பெருமாளுக்கு எதிரே கருடனின் சிலை இருப்பதைக் காணலாம். அந்த கருட பகவானைப் பற்றிய சில விஷயங்களை இங்கே பார்க்கலாம்.

நேபாள நாட்டில் நடக்கும் கருட நாக யுத்தம்

* கருட பெருமான் திருமாலின் இரண்டு திருவடிகளையும் தம் இருகரங்களால் தாங்கி ஊர்வலமாக வரும் காட்சியே ‘கருட சேவை’ எனப்படும். அப்போது பெருமாள், கருடன் ஆகிய இருவரின் அருளும் ஒருங்கே கிடைப்பதைப் பக்தர்கள் புனிதமாகக் கருதுகிறார்கள்.

* நேபாள நாட்டில் கருட நாக யுத்தம் என்று ஒரு விழா நடைபெறுகிறது. அப்பொழுது கருடனுடைய திருமேனியில் வியர்வைத் துளிகள் தோன்றும்.

அதைத் துணியால் ஒற்றி எடுத்து அதை அரசருக்கு அனுப்புவார்கள். அந்தத் துணியின் நூலிழையை பாம்பு கடித்த மனிதனுக்கு சுற்றினால் பாம்பு கடி விஷம் உடன் இறங்கி விடும்.

* ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீரியம், அதீத சக்தி, தேஜஸ் என்ற ஆறுவிதமான குணங்களுடன் கருடன் திகழ்கிறார்.

* ஏகாதசி, திருவோணம் போன்ற புண்ணிய தினங்களில் கருடனுடைய மகிமையை படிப்பவர்களும், கேட்பவர்களும் கடும் நோய்களில் இருந்து விடுதலை பெறுவர்.

* கருடனுக்கு கருத்மான், சாபர்ணன், பந்தகாசனன், பதகேந்திரன், பகிராஜன், தார்ச்டயன், மோதகாமோதர், மல்லீபுஷ்ய பிரியர், மங்களாலயர், சோமகாரீ, பெரிய திருவடி, விஜயன், கிருஷ்ணன், ஜயகருடன், புள்ளரசு, கலுழன், சுவணன்கிரி, ஓடும்புள், கொற்றப்புள் என்றும் பெயர்கள் உண்டு.

* கருடனுக்கு சிவப்பு நிறமுள்ள பட்டு வேஷ்டியை அணிவித்து, மல்லிகைப்பூ, மருக்கொழுந்து, கதிர்ப் பச்சை (தமனகம்), சம்பகப் பூக்களால் அர்ச்சனை செய்வது சிறந்தது.

* பெருமாளை தங்கள் தமிழால் புகழ்ந்து பாடிய 12 ஆழ்வார்களும், நாலாயிரம் திவ்ய பிரபந்தத்தில் 36 இடங்களில் கருட பகவானைப் பற்றி சிறப்பித்துப் பாடியிருக்கிறார்கள்.

* சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்து அரியக்குடி எனும் ஊர் உள்ளது. இங்கு ஸ்ரீனிவாசப் பெருமாள் எழுந்தருளி உள்ளார். இக்கோவிலில் மூலைக் கருடன் வழிபாடு சிறப்பானது. நல்லது நடக்கவும், தீமைகள் மறையவும் இங்கு மூலைக் கருடனுக்கு சிதறுகாய் உடைப்பது வழக்கம்.

* எல்லா திவ்ய தேசங்களிலும் இரண்டு கரங்களையும் குவித்து வணங்கும் கருடாழ்வாரைத்தான் காணமுடியும்.

திருக்கண்ணங்குடி என்ற திவ்ய தேசத்தில் மட்டும் இரண்டு கைகளையும் கட்டிக் கொண்டு தரிசனம் தருகிறார். இந்தக் காட்சி வைகுண்டத்தில் கருடன் எழுந்தருளியுள்ள காட்சி என்கிறார்கள்.

* கும்பகோணத்திற்கு அருகில் திருவெள்ளியங்குடி என்ற தலம் உள்ளது. இந்த தலத்தில் கருடாழ்வார் நான்கு கரங்களுடன், கைகளில் சங்கு சக்கரங்கள் கொண்டவராக காட்சி தருகிறார். இந்த தரிசனத்தை வேறு எந்தத் தலத்திலும் காண முடியாது. சங்கு சக்கரங்களைப் பெற்றதால் பெருமாளின் சக்தியே தன்னிடம் வரப்பெற்றவராய் கருடாழ்வார் இங்கு திகழ்கிறார்.

* நவரத்தினங்களில் ஒன்றான பச்சை நிறமுள்ள மரகதத்திற்கு ‘கருடோத்காரம்’ அல்லது ‘கருடமணி’ என்று பெயர். கருடனால் விழுங்கி துப்பப்பட்ட பலாசுரன் என்ற அசுரனின் எலும்புகளே மரகதமாக மாறியதாக புராணக்கதை ஒன்று உள்ளது. இதை அணிவதால் பாம்பு போன்ற விஷ ஜந்துக்களால் துன்பம் ஏற்படாது.

* திருவனந்தபுரத்திலுள்ள ஸ்ரீ அனந்தபத்மநாப சுவாமி கோவிலுள்ள கருட பகவான் ஆறு முதல் ஏழு அடி உயரத்தில் நின்ற நிலையில் நாகங்களைப் பூண்டு சேவை தருகிறார்.

* திருவில்லிபுத்தூரில் ரெங்கமன்னார் மற்றும் ஆண்டாளுடன், கருடனும் ஒரே ஆசனத்தில் காட்சி தருவது வேறு எந்த தலத்திலும் இல்லாத சிறப்பு.

இப்படி இங்கு கருடனுக்கு தனி மரியாதை கொடுப்பதன் காரணம், கருடன் பெரியாழ்வாராக அவதரித்ததால் மாமனார் ஸ்தானம் ஆகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *