திரிபுரசுந்தரி சமேத சந்திர மவுலீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா!!

சித்தூர்:
சித்தூர் மாவட்டம் நகரி தொகுதிக்கு உட்பட்ட கீழப்பட்டு கிராமத்தில் திரிபுரசுந்தரி சமேத சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) மகா சிவராத்திரி விழா நடக்கிறது.

அதையொட்டி 6 கால அபிஷேகமும் நடக்க உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோவிலில் நாக தீர்த்தம், ஐஸ்வர்ய தீர்த்தம் என 2 தீர்த்தங்கள் உள்ளன. அதில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தால் நாக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

இந்த கோவிலுக்கு மடாதிபதிகள் பலர் வந்து தங்கி பூஜைகள் செய்து சிவனை வழிபட்டுள்ளனர். அதேபோல் காஞ்சி மகா பெரியவர் எனப்படும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இக்கோவிலுக்கு வந்து பல மாதங்கள் தங்கி பூஜைகள் செய்து சிவனை வழிபட்டுள்ளார்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவிலில் கரும்புகளால் அமைக்கப்பட்ட லிங்கம், வில்வக்காய்களால் உருவாக்க ப்பட்ட லிங்கம், விபூதியால் செய்யப்படட லிங்கம், சந்தனத்தால் உருவாக்கப்பட்ட லிங்கம், பனை ஓலைகளில் அமைக்கப்பட்ட லிங்கம், பசு சாணத்தால் உருவாக்கப்பட்ட லிங்கம், ஐந்து லட்சம் ருத்ராட்சங்களால் அமைக்கப்பட்ட லிங்கம் எனப் பல்வேறு லிங்க அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு வந்தன.

இந்த மகாசிவராத்திரி விழாவையொட்டி 10 அடி உயரத்தில் தென்னை ஓலையால் செய்யப்பட்ட லிங்கம் மற்றும் 9 அடி உயரத்தில் ருத்ராட்சங்கள், துளசி மணி, தாமரை மணிகளால் செய்யப்பட்ட ஏகபாத மூர்த்தி உருவம் வைக்கப்பட்டுள்ளது.

மகாசிவராத்திரியான நாளை ஏகபாத மூர்த்திக்கு 6 கால பூஜையும், உமா மகேஸ்வரன் திருக்கல்யாண வைபவமும் நடக்க உள்ளது. நாளை காலை 10 மணியில் இருந்து இரவு வரை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

கோவிலுக்கு உள்ளூர், வெளியூர், பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் சாமி தரிசனம் செய்ய தரிசன வரிசை வழியாக கோவிலுக்குள் அனுப்பி வைக்கப்படுவார்கள். பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *