சென்னை:
‘கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இந்த எஃகு கோட்டையை இனி எவராலும் அசைக்க முடியாது. இனி நமக்குள் பிரிவில்லை. நம் இலக்கு ஒன்றுதான்.
அது கோட்டையில் மீண்டும் நமது இரட்டை இலை கொடி பறப்பது மட்டுமே.’ என அதிமுக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதிமுக ஐடி விங்க் வெளியிட்ட எக்ஸ் பதிவில், எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்காகவே இயங்கும் என ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.
கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இந்த எஃகு கோட்டையை இனி எவராலும் அசைக்க முடியாது. இனி நமக்குள் பிரிவில்லை.
இந்த எஃகு கோட்டையை தகர்க்க இனி எவருக்கும் வழியில்லை. நம் இலக்கு ஒன்றுதான்.
அது கோட்டையில் மீண்டும் நமது இரட்டை இலை கொடி பறப்பது மட்டுமே. நாளை நமதே, தமிழ்நாடும் நமதே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் வென்றது.
இதில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்எல்ஏ.க்கள் தவெகவுக்கு ஆதரவளித்தனர். 22 எம்எல்ஏ.க்கள் பழனிசாமிக்கு ஆதரவளித்தனர்.
அதிமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக வேலுமணியை நியமிக்க 25 எம்எல்ஏ.க்களும், பழனிசாமியை நியமிக்க 22 எம்எல்ஏ.க்களும் தனித்தனியாக சபாநாயகரிடம் மனு அளித்தனர்.
இதனையடுத்து அந்த 25 எம்எல்ஏ.க்களின் கட்சிப்பதவியை பறித்து அதிரடி காட்டினார் பழனிசாமி. மேலும் அவர்கள் மீது கட்சித்தாவல் நடவடிக்கை எடுக்கவும் தயாரானார்.
இந்த சூழலில் வேலுமணி அணியில் இருந்த 4 எம்எல்ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
இந்நிலையில், நேற்று வேலுமணி அணியை சேர்ந்த நத்தம் விஸ்வநாதன், அருண்மொழித் தேவன், ஹரி, தங்கமணி ஆகியோர் பழனிசாமியுடன் பேசினர்.
இதனையடுத்து இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளதை வெளிப்படுத்தும் விதமாக, அதிமுக ஐடி விங்க் இந்த பதிவினை வெளியிட்டுள்ளது.
இருப்பினும் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவலை அதிமுக தலைமை வெளியிடவில்லை. இதை எக்ஸ் தளத்தில் ஒரு பதிவாக மட்டுமே அதிமுக ஐடி விங் பகிர்ந்துள்ளது.