”நடிகர் விஜய் கூறியது போல வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெறாமல் மைனஸில் சென்றால் அவரது வாய்க்கு சர்க்கரை போடுவேன்” – நடிகை கஸ்தூரி..!!

இந்து மக்கள் கட்சி சார்பில் சனாதன ஆதரவு வழக்கறிஞர்கள் கருத்தரங்கு திருச்சி ஸ்ரீரங்கம் கிழக்கு உத்தரவீதியில் நடைபெற்றது. இதில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், நடிகை கஸ்தூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் நடிகை கஸ்தூரி செய்தியாளர்களிடம் கூறியது: “இந்த கூட்டத்தில் சனாதனி, சட்டம் படித்தவள் என்ற முறையில் கலந்து கொண்டேன். பிராமணர்கள் ஏதாவது கருத்துக்கூறினால் அவர்கள் மீது பொய் வழக்கு போடுவது, அவர்களுக்கு எதிரான பிரச்சாரத்தை முடுக்கி விடுவது போன்ற செயல்களை எப்படி எதிர்கொள்வது என ஆலோசித்து வருகிறோம்.

நவ.3-ம் தேதி சென்னையில் இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டத்தில் நான் பேசாத விஷயங்கள் பெரிதாக்கப்பட்டன.

நடிகர் விஜய் கூறியது போல வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெறாமல் மைனஸில் சென்றால் அவரது வாய்க்கு சர்க்கரை போடுவேன். இதற்கே அவருக்கு ஆதரவு தரவேண்டும்.

விசிகவில் ஒன்று திருமாவளவன் இருக்க வேண்டும் அல்லது ஆதவ் அர்ஜூனா இருக்க வேண்டும் என்ற நிலை தான் உள்ளது.

திமுக கூட்டணி எம்பியாக இருக்கும் திருமாவளவன் அக்கூட்டணியை விட்டு வெளியே வருவாரா எனத் தெரியவில்லை.

சினிமா செய்திகளை பார்ப்பதில்லை என உதயநிதி கூறுவது தனது ரெட் ஜெயன்ட் மூவிஸை கூறுகிறார் போல. உதயநிதிக்கு தரக்குறைவாக பேசுவது ஒன்றும் புதிதல்ல. இன்று விஜய்யை பற்றி பேசியுள்ளார்.

விஜய்க்கு ஜாக்பாட் அடித்துள்ளது. தமிழகத்தில் உதயசூரியனுக்கு மாற்று இரட்டை இலை தான் என 60 ஆண்டு காலமாக இருந்து வந்தது.

தவெக இன்னும் சின்னமே வாங்கவில்லை. என்ன சின்னம் வரப்போகிறது என்பது கூடத் தெரியாது. விஜய்யை முன்னிறுத்தி திமுக அதிமுகவின் உண்மையான வீச்சையும், அவர்களுடைய உண்மையான முகத்தையும் மறைக்கின்றனர்.

இது ஒரு வியாபார தந்திரம். அமைச்சர் சேகர் பாபுவின் குட்புக்கில் கஸ்தூரி இல்லை. என்னுடைய சமீபகால வரலாறை பார்த்தால் உங்களுக்கு புரியும். அதனால் அவர் குறித்து நான் பேச விரும்பவில்லை.

2026 தேர்தலில் ஒரு கட்சிக்கு எதிராக அனைத்து கட்சிகளும் தனித்தனியாக போராடி வருகின்றனர். அனைத்து கட்சிகளும் ஒரு குடையின் கீழ் வரவேண்டும். மக்களைப் பொருத்தவரை அனைத்து பிரச்சனைகளுக்கும் ஏதோ ஒரு வகையில் ஆளுகின்ற திமுக அரசு காரணமாக இருக்கிறது என்ற மனநிலைக்கு வந்து விட்டனர்.

சமீபத்தில் வெள்ளம் வந்தது. ரூ.4,000 கோடிக்கு குழாய் பதித்தனர். அது வேலை செய்யவில்லை. ஜெனரேட்டர், மோட்டார் பம்புகளை வைத்து தண்ணீரை அப்புறப்படுத்தினர்.

ரூ.4,000 கோடிக்கு குழாய் பதித்ததற்கு பதிலாக ஜெனரேட்டரும், மோட்டார் வாங்கி இருக்கலாமே.

இது மக்களுக்கும் தெரியும். அனைவரும் வெறுப்பில் உள்ளனர். இதை மீறி 2026-ல் மீண்டும் திமுக ஜெயிக்குமா என்றால், அனைவரும் தனித்தனி அணியாக இருப்பதால் திமுக வெற்றி பெறலாம்.

இதனாலேயே விஜய், இபிஎஸ், அண்ணாமலை ஆகியோரை உசுப்பேற்றிவிட்டு அவர்கள் ஒன்றிணையாமல் இருக்க பிரித்தாளும் சூழ்ச்சியை திமுக கச்சிதமாக மேற்கொள்கிறது. சீமான் தனித்து தான் நிற்பேன் என கூறியுள்ளார்.

சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை. திமுகவை வெளியேற்ற வேண்டும் என்ற மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதன் பின் அவரவர் கொள்கைகளை பாருங்கள்” என்று கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *