கோவை:
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
தமிழக பொதுப்பணி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் போதை மற்றும் மது கலாச்சாரம் இளைஞர்களிடம் அதிகரித்துள்ளது.
இதனால் பெண்கள் பாதுகாப்புக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் உருவாகி உள்ளன. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற போதை கலாச்சாரம் தமிழ்நாட்டில் இல்லை.
இன்றைக்கு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரிடையே கூட போதை கலாச்சாரம் உருவாகியிருப்பதை பார்க்கிறோம். இதனை விளையாட்டுத்துறை மூலம் கவனம் செலுத்தி சரிசெய்ய உள்ளோம்.
தமிழ்நாடு முழுவதும் எந்தெந்த ஊரில் எந்தெந்த விளையாட்டு மைதானங்கள் உள்ளது என்பதை அறியும் வகையில், முதல்வர் உத்தரவுப்படி இணையதளம் ஒன்றை தயார் செய்து வருகிறோம்.
கோவை ஒண்டிப்புதூரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணியை நிறுத்தி வைத்துள்ளோம். இது தொடர்பாக உரிய வல்லுநர்கள் அனுமதியுடன் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை, கோவை, திருச்சி, நாகை, திருநெல்வேலி போன்ற ஊர்களில் உலகத்தரத்தில் விளையாட்டு மைதானங்கள் உருவாவதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார்.
இந்தியாவில் அதிகமான சாலை விபத்துகள் தமிழ்நாட்டில்தான் நடக்கிறது. ஆண்டுதோறும் சராசரியாக தமிழக நெடுஞ்சாலைகளில் 18 ஆயிரம் பேர் இறக்கின்றனர்.
இதனை குறைக்க நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம். வாகனங்களின் வேகத்தை குறைக்கவும், அபராதத்தை விதிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது.
பாலங்கள் கட்டுவது தொடர்பாக கடந்த ஓராண்டாக நடந்த டெண்டர்களை நிறுத்தி வைத்துள்ளோம். இதற்கு முன்பு இந்த துறையில் ஊழல்கள் நடந்துள்ளன. டெண்டர்கள் தொடர்பாக தணிக்கை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.