கோவை;
ஒரு காலத்தில் கோவையில் வானதி சீனிவாசன் மட்டுமே பாஜக-வின் அதிகார மையமாக இருந்தார்.
ஆனால், மக்களவைத் தேர்தலைக் குறிவைத்து அண்ணாமலை தனது அரசியல் செயல்பாடுகளை கோவைக்கு மாற்றியதும் மையம் இரண்டானது. கோவை பாஜக-வில் அண்ணாமலை பாஜக, வானதி பாஜக என இரண்டு கோஷ்டிகள் ஆவர்த்தனம் செய்தன.
இதனால் சில சங்கடங்களும் ஏற்பட்ட நிலையில், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வானதியும், அண்ணாமலையும் சாதுர்யமாக அரசியல் செய்தனர். இப்போது அண்ணாமலை மாற்றப்பட்டுவிட்டதால் மீண்டும் ஒன்மேன் ஆர்மியாகி இருக்கிறார் வானதி. பழையபடி கோவை பாஜக அவரைச் சுற்றியே நகர்கிறது.
பாஜக மகளிரணியின் தேசிய தலைவரான வானதி சீனிவாசன் 2021 சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை தோற்கடித்து பாஜக தலைமையின் கூடுதல் அபிமானத்தைப் பெற்றார்.
இந்த வெற்றிக்குப் பிறகு தனது செயல்பாடுகளை இன்னும் வேகப்படுத்திய வானதி, சட்டமன்றத்தில் கேள்விகளை எழுப்புவதிலும் கருத்துகளை பதிவு செய்வதிலும் திமுக-வுக்கு சிம்மசொப்பனமானார்.
அதேபோல் கோவை மாவட்ட அரசியலை பொறுத்தவரை, தொழில் துறையினரின் பிரச்சினைகளை மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்றதுடன் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை கோவைக்கு அழைத்து வந்து தொழில்துறையினருடன் கலந்துரையாட வைத்தும் தனது இமேஜை உயர்த்திக் கொண்டவர் வானதி. ஆனால், இவை அனைத்துமே அண்ணாமலையின் கோவை வருகைக்கு முன்பு வரை தான்.
அண்ணாமலை கோவை பக்கம் திரும்பியதும், தொழில்துறையினரும் அவர் பக்கம் திரும்ப ஆரம்பித்தார்கள். வானதிக்கான அரசியல் முக்கியத்துவமும் இரண்டாமிடத்துக்கு போனது.
இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் தோற்றுப் போனதுமே கோவை மீது தனக்கிருந்த பிடிப்பை கொஞ்சம் தளர்த்திக் கொண்ட அண்ணாமலை, எதிர்பார்ப்புகளையும் குறைத்துக் கொண்டார்.
இதனால் மீண்டும் வானதியின் கை ஓங்க ஆரம்பித்தது. இருந்த போதும் மாநில தலைவர் பொறுப்பில் இருந்ததால் அண்ணாமலை மீது கோவை மக்களுக்கு இன்னும் கொஞ்சம் பற்று மீதி இருந்தது.
ஆனால், தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை மாற்றப்பட்டதுடன் அதிமுக-வுடன் கூட்டணியும் இறுதியானதால் மீண்டும் கோவையில் வானதியின் கொடி பறக்க ஆரம்பித்திருக்கிறது.
அதிமுக கூட்டணியால் கடந்த முறை வெற்றி பெற்ற வானதி, மீண்டும் அதிமுக-வுடன் கூட்டணி அமைய வேண்டும் என்பதிலும் அதிக முனைப்புடன் இருந்தவர் என்பதும் இப்போது கோவையில் அவரது செல்வாக்கு அதிகரிக்க முக்கிய காரணம்.
இதையடுத்து, கோவை தொழில்துறையினர் பலரும் மத்திய அரசின் மூலம் தங்களுக்குக் கிடைக்கவேண்டிய சலுகைகளுக்காக வானதியை நாட ஆரம்பித்திருக்கிறார்கள்.
அண்ணாமலையின் செல்வாக்கை குறைத்து வானதி மீண்டும் அதிகாரத்துக்கு வருவதை பார்த்து அதிமுக-வினரும் ஆனந்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய கோவை பாஜக நிர்வாகிகள் சிலர், “அதிமுக கூட்டணியில் வெற்றிபெற்ற வானதி சீனிவாசன், அதை வைத்து கோவை மாவட்ட பாஜக-வில் தனக்கென தனியான செல்வாக்கை வளர்த்துக் கொண்டார்.
இதில் அவரது உழைப்பும் இருக்கிறது. இடையில் அண்ணாமலை என்ட்ரியால் அவரது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை விழுந்தது உண்மைதான். இருப்பினும் மாநில தலைவரை எதிர்த்து அவரால் எதுவும் பேசமுடியாத நிலை. அதனால் அமைதி காத்தார்.
இப்போது அவருக்கு ரூட் க்ளியர் ஆகி இருக்கிறது. அதேசமயம், மாநிலங்களவைக்கு சிபாரிசு செய்யப்படாத பட்சத்தில் அண்ணாமலை சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவார்.
அப்படி போட்டியிட்டால் கோவை மாவட்டத்தில் தான் அவர் போட்டியிடுவார். ஆனாலும் அப்போது அவர் வானதிக்கு சக வேட்பாளராகத்தான் இருப்பாரே தவிர இன்னொரு அதிகார மையமாக வரவாய்ப்பில்லை” என்றனர்.
இந்த நிலையில், பஹல்காம் தீவிரவாத தாக்குதலை கண்டித்து கோவையில் பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு முதலில் அண்ணாமலையை சிறப்புப் பேச்சாளராக போட்டு போஸ்டர் அடித்திருந்தார்கள்.
இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை, ஆர்ப்பாட்ட நாளில் அண்ணாமலைக்குப் பதிலாக அந்த இடத்தில் வானதி இருந்தார்.
அன்றைய தினம் கோவை விமான நிலையத்துக்கு வந்த அண்ணாமலை, “அண்ணே நான் ஈரோடு செல்கிறேன்” எனச் சொல்லிவிட்டு செய்தியாளர்களிடம் இருந்து எஸ்கேப் ஆனார்.
தேர்தலுக்குள் இன்னும் எத்தனை எஸ்கேப்கள் நடக்கிறதென்று பொறுத்திருந்து பார்க்கலாம்