தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் மக்களவைத் தேர்தலில் பாஜகவின் செயல்பாடுகள் குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது –
மேட்சில் கேட்ச் பிடிப்பதை தொடர்ந்து தவறவிட்டீர்கள் என்றால், கட்டாயம் பேட்டிங் செய்பவர் சதம் அடித்துவிடுவார். குறிப்பாக அவர் பேட்டிங் செய்வதில் சிறந்தவராக இருந்தால்.
அவர்கள் ஆதிக்கம் செலுத்தினாலும், பாஜகவோ பிரதமர் நரேந்திர மோடியோ வீழ்த்தப்பட முடியாதவர்கள் அல்ல. பாஜக பின்தங்கிய நிலையில் இருக்கும் போது எதிர்க்கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ் கட்சி அதனை பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டது.
2015 மற்றும் 2016ல் அசாம் தவிர பல சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக தோல்வியை சந்தித்தது. அதில் இருந்து பாஜக மீண்டு எழுவதற்கு எதிர்க்கட்சிகள் விட்டுவிட்டன. பணமதிப்பிழப்புக்கு பின்னர் 2017ம் ஆண்டு நடந்த தேர்தலில் உத்தர பிரதேசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் குஜராத்தில் நூலிழையில் தோல்வியில் இருந்து தப்பியது. 2020 கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு 2021ல் மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியிடம் தோல்வி அடைந்தது.
ஆனால் எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் வீடுகளில் இருந்து கொண்டு பிரதமரை மீண்டும் எழச் செய்து விட்டனர்.
வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் பாஜக வலுவாக உள்ள குறைந்தபட்சம் 100 தொகுதிகளி லாவது காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி, அவர்களை தோற்கடித்தால் மட்டுமே, பாஜகவுக்கு எதிர்ப்பை உணர்த்த முடியும். ஆனால் இது நடக்கப் போவதில்லை.
தெலங்கானாவில் பாஜக முதல் அல்லது 2வது கட்சியாக வருவார்கள். இது மிகப்பெரிய விசயமாகும். ஒடிசாவில் அவர்கள் முதல் இடத்தில் வருவார்கள் என்பது உறுதி. உங்களுக்கு ஆச்சரியமளிக்கும் வகையில் மேற்கு வங்கத்தில் முதல் இடத்தில் வருவார்கள்.
தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவீதம் இரட்டை இலக்கத்தை எட்டும். 2019ம் ஆண்டு தேர்தலில் 3.66 சதவீதம் வாக்கு பெற்றது. ஆனால் எந்த தொகுதியிலும் வெற்றிபெறவில்லை. ஆனால் இந்த முறை 3-5 தொகுதிகளில் பாஜக வெல்லும் என சில கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
தமிழ் நாட்டுக்கு கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் எத்தனை முறை சென்றுள்ளார் என்பதையும் ராகுல் காந்தி, சோனியா காந்தி போன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் எத்தனை முறை சென்றார்கள் என்பதையும் எண்ணிப் பாருங்கள். உத்தர பிரதேசம், பிகார், மத்திய பிரதேசத்தில் தான் உங்களுக்கு கடுமையான போட்டி. ஆனால், நீங்கள் மணிப்பூர், மேகாலயாவில் சுற்றுப்பயணம் செய்கிறீர்கள். பின்னர் எப்படி வெற்றி பெறுவீர்கள்.
உ.பி, பிகார், மத்திய பிரதேசத்தில் வெற்றிபெறாமல், வயநாட்டில் வெற்றி பெற்று பயனில்லை. 2014ம் ஆண்டு தேர்தலில் பிரதமர் மோடி, சொந்த குஜராத் மாநிலம் தவிர, உத்தர பிரதேசத்திலும் போட்டியிட்டார். ஏனென்றால், இந்தி (மொழி பேசப்படும்) மத்திய பகுதிகளை வெற்றி கொள்ளாமலோ, அங்கு இருப்பை பதிவு செய்யாமலோ இந்தியாவை பெற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் மோடி கூறுவது போல், பாஜக 370 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பில்லை, ஆனால், உறுதியாக 300 இடங்களில் வெற்றி பெறும் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.