சென்னை:
“மின்வெட்டுக்கு உரிய காலத்தில் தீர்வு காணப்பட வேண்டும். அதைவிட்டுவிட்டு, ஏதோ தவறு நடந்தது போல தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள்,” என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தவெக அரசு பொறுப்பேற்று இதுவரைக்கும் மின் விநியோகம் தொடர்பாக ஓர் ஆய்வுக்கூட்டத்தை கூட மின்சாரத்துறை அமைச்சர் நடத்தவில்லை.
கடைநிலை வரைக்கும் உள்ள அதிகாரிகளிடம் ஆய்வுக்கூட்டம் நடத்தினால்தான் எந்த ஊரில் என்ன பிரச்சினை என்று தெரியும். அமைச்சரே தன்னை யாரோ மிரட்டுவதாக சொல்கிறார்;
அமைச்சருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் சாமானியர்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும். சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது எனப் பாருங்கள்.
டெண்டர் விடுவதில் யாரும் தவறு செய்ய முடியாது; டெண்டர் விடும் முன் ஆய்வு செய்ய ஒரு குழு இருக்கும். ஒரு குழு தவறு செய்தாலும் , மற்றொரு குழு தவறை கண்டறிந்துவிடுவார்கள்.
அதை ரத்து கூட செய்யலாம். அவர்களிடம் நிர்வாகத் திறன் இல்லை. அதோடு, அமைச்சர்கள் அந்த துறையைப் பற்றி கவனம் செலுத்தி முழுமையாக அறிந்து கொள்ளாமல், அரைகுறைத்தனமாக மாற்றுக் கருத்துக்களை பேசி வருகிறார்கள்.
மின்வெட்டுக்கு உரிய காலத்தில் தீர்வு காணப்பட வேண்டும். அதைவிட்டுவிட்டு, ஏதோ தவறு நடந்தது போல தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள்.
ஹார்டு டிஸ்குகள் காணாமல் போனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். இது அரசு, துறை சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் கடமை.
மின்துறையை சீரமைக்கப் போகிறேன் என இரண்டு மூன்று பேட்டிகளில் சொல்லி இருக்கிறார்; முதலில் மின்வெட்டை அவர் சீரமைக்க வேண்டும்.
அவர்களுக்கு துறை சார்ந்த புரிதல் இல்லை; அதற்கான தகுதியும் அவர்களுக்கு இல்லை. அதை மறைக்கவே கருப்பு ஆடுகள் இருப்பதாகச் சொல்கின்றனர்.
திட்டங்களை நிறைவேற்ற அவகாசம் கேட்கலாம்; சட்டம் ஒழுங்குக்கு அவகாசம் கேட்கக்கூடாது. தவெக அரசு மக்களின் நன்மதிப்பை இழந்துவிட்டது.
இது ரியல் ஆட்சி அல்ல, ரீல்ஸ் ஆட்சி என மக்களே புரிந்து கொண்டு விட்டனர். இன்னும் முழுமையாக உணர்வார்கள்.
இந்த அரசிடம் வெளிப்படைத்தன்மை இல்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என இருக்கிறார்கள் என்று இதைத்தான் மக்கள் எங்களிடம் சொல்கிறார்கள்.
வாக்கு சேகரிக்கும் போது என்ன பேசினாரோ, அதையே தான் நன்றி அறிவிப்பு கூட்டத்திலும் முன் வைக்கிறார்.
மீண்டும் எங்களுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி எனப் பேசுகிறார். தேர்தல் பிரச்சாரப் பயணத்தில் சொன்ன அதே ஸ்கிரிப்ட் தான், இப்போதும் இருக்கிறது; அதை அவர்கள் மாற்றவில்லை.
இன்றைய சூழலில் தமிழக சட்டப்பேரவையில் பொது தேர்தல் நடந்தால், நிச்சயம் 200 தொகுதிகளை திமுக வெற்றி பெறும். மு.க.ஸ்டாலின் தான் மீண்டும் முதல்வர் ஆவார்.
மக்களுடைய மனநிலை அப்படித்தான் இருக்கிறது” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.