நிறைய மக்களை இணைத்து செயல்பட வேண்டும்; ஒரு புதிய அரசியலை, அடிப்படை கட்டமைப்புகளை மாற்றக்கூடிய அரசியலை உருவாக்க வேண்டும்…. அண்ணாமலை அறிவிப்பு!!

புதுடெல்லி:
“அதிக மக்களை இணைக்கும் ஒரு புதிய அரசியல் இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பதே தனது மிகப்பெரிய ஆசை” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜகவில் இணைந்து அக்கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைமையிடம் வழங்கி இருந்தார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாக பாஜக இன்று அறிவித்தது.

இந்நிலையில், தனது எதிர்கால திட்டங்கள் குறித்து சமூக ஊடகங்கள் வாயிலாக அவர் பேசினார். அப்போது அண்ணாமலை கூறியதாவது: நான் 2020, ஆகஸ்ட் 25-ல் பாஜகவில் இணைந்தேன்.

தமிழக மக்களுக்காக 6 ஆண்டு காலம் பணியாற்றுவதற்கு பெரிய வாய்ப்பு கிடைத்தது. அதை பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.

என்னுடைய பாதை வேறு; வேறு பாதையில் பயணம் செய்ய வேண்டும்; எனக்கு இலக்குகள் பெரியதாக உள்ளன; நிறைய மக்களை இணைத்து செயல்பட வேண்டும்;

ஒரு புதிய அரசியலை, அடிப்படை கட்டமைப்புகளை மாற்றக்கூடிய அரசியலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு நான் இருக்கிறேன் என்பதை பாஜக தலைவர்களிடம் பண்போடு சொல்லிவிட்டு அந்த இயக்கத்தில் இருந்து வெளியே வந்துள்ளேன். இது தமிழர் பண்பு என்றும்கூட வைத்துக்கொள்ளலாம்.

ஒரு புதிய இயக்கம், ஒரு புதிய அரசியல் இயக்கம், ஒரு புதிய பரிமாணத்தோடு இயங்கக்கூடிய வகையில்தான் நமது இயக்கத்தை தொடங்க வேண்டும்; எல்லோரும் சேர்ந்து, இணைந்து இதை ஆரம்பிக்க வேண்டும் என்பது எனது பெரிய ஆசை.

எனது அரசியல் பாதை எளிதானது அல்ல. வளைந்து, நெளிந்து நான் இங்கு வந்திருக்கிறேன்.

ஒரு கிராமத்தில் பிறந்து, ஒரு விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன் நான். இதுபோன்ற எளிய பின்னணி கொண்ட மனிதர்கள் அரசியலுக்கு வருவதே அரிது. ஏனெனில், நாம் ஒதுங்கிக் கொள்வோம்; வர மாட்டோம்.

என்னுடைய பாதையும்கூட 2009ல் விஜயகாந்த்தின் தேமுதிகவில் மூன்று மாத காலம் இருந்து பயிற்சி பெற்று, பின்னர் 10 ஆண்டு காலம் கழித்து பாஜகவில் இணைந்து அங்கு 6 ஆண்டு காலம் பணியாற்றிய நிலையில், தற்போது தனித்துவமான முறையில் நம்முடைய இயக்கத்தை மக்கள் முன் வைக்க வேண்டும் என்பதற்காக நான் உங்கள் முன் நிற்கிறேன்.” இவ்வாறு அண்ணாமலை அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *