லண்டன்:
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
நியூஸிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 4-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 140 ரன்களும், நியூஸிலாந்து 113 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தன.
27 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து 226 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
இதையடுத்து 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூஸிலாந்து அணி 2-வது இன்னிங்ஸை விளையாடியது.
ஆனால் 3-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் நியூஸிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் என்ற நிலையில் தடுமாறிக் கொண்டிருந்தது.
நேற்று நடைபெற்ற 4-ம் நாள் ஆட்டத்தை டேவன்கான்வே 19 ரன்களுடனும், டாம் பிளண்டல் 2 ரன்களுடனும் தொடங்கினர்.
ஆனால் கான்வே 41 ரன்களுக்கும், பிளண்டர் 4 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். நாதன் ஸ்மித் 4, கைல் ஜேமிசன் 6 ரன்களுக்கு வீழ்ந்தனர்.
இறுதியில் 40.3 ஓவர்களில் 138 ரன்களுக்கு அந்த அணி ஆட்டமிழந்தது. கிளென் பிலிப்ஸ் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
நியூஸிலாந்து அணித்தரப்பில் கஸ்அட்கின்ஸன் 5, ஆலி ராபின்சன், ஜோஷ் டங் ஆகியோர் தலா 2, பென் ஸ்டோக்ஸ் ஒரு விக்கெட்டைச் சாய்த்தனர்.
இதையடுத்து 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. ஆட்டநாயகனாக ஆலி ராபின்சன் தேர்வு செய்யப்பட்டார். இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 17-ம் தேதி லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கவுள்ளது.