தேர்தல் பிரச்சாரத்தின்போது கருத்து சுதந்திரம் பற்றி பேசினார் முதல்வர் விஜய்; ஆனால், அவருடைய ஆட்சியில் மாரிதாஸ் கைது செய்யப் பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது – தமிழிசை கடும் விமர்சனம்!!

சென்னை:
“தேர்தல் பிரச்சாரத்தின்போது கருத்து சுதந்திரம் பற்றி பேசினார் முதல்வர் விஜய். ஆனால், அவருடைய ஆட்சியில் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது” என்று தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது:

தேர்தல் பிரச்சாரத்தின்போது கருத்து சுதந்திரம் பற்றி பேசிய முதல்வர் விஜய், ஆளும் ஆட்சியை எதிர்த்து விமர்சித்து பேசுபவர்களைக் கைது செய்யும் சம்பவங்களைக் கண்டித்தார்.

ஆனால், இப்போது இவருடைய ஆட்சியில் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஆட்சியில் குறைபாடுகள் இருப்பதாக தகுந்த தரவுகளுடன் கூறி, அதனை திருத்திக் கொள்ள வேண்டும் என்றுதான் அவர் குறிப்பிட்டார். அதற்காக அவர் கைது செய்யப்படுவது கண்டிக்கத்தக்கது.

தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான், வக்பு சட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று கூறுகிறார்.

அது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதா. அதை செயல்படுத்த மாட்டோம் என்று ஒரு அமைச்சர் கூறுவது ஏன்? இது மதச்சார்பற்ற அரசு என்று கூறி கொள்கின்றனர்.

ஆனால், இது மதம் சார்புடன் செயல்படும் ஒரு அரசாக, மாறிக்கொண்டு இருக்கிறதோ என்ற தோற்றத்தையும், இந்து மத எதிர்ப்பு அரசாங்கமா என்ற சந்தேகத்தையும் ஏற்படுகிறது.

அதேபோல், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று கூறுகின்றனர்.

நீதிமன்ற தீர்ப்பு இருந்தாலும் அதை புறந்தள்ளுகிறார்கள். ஒரு பாரபட்சமான அரசு நடந்துகொண்டு இருக்கிறது.

அரசு தொலைநோக்கு பார்வையில் செயல்பட்டு, என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை சிந்தித்து பார்த்து செயல்பட்டு இருக்க வேண்டும்.

அவ்வாறு செய்யாமல், ஆட்சியை குறைகூறுபவர்களைக் கைது செய்வது, வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்றார் தமிழிசை.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *