தமிழகத்தில் நடைபெறும் ரீல்ஸ் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது!! தவெக பெண் தொண்டர் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏவை விசாரிக்காதது ஏன்?” – கீதா ஜீவன்…..

தூத்துக்குடி:
தமிழகத்தில் நடைபெறும் ரீல்ஸ் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான பி.கீதாஜீவன் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் நேற்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: தமிழக முதல்வர் தொடங்கி வைத்த சிங்கப்பெண் பாதுகாப்பு படை என்பது முந்தைய திமுக ஆட்சியில் சிறப்பாக செயல்பட்ட பிங்க் ரோந்து காவல் பிரிவு தான். அதன் பெயரை மாற்றி தற்போது தொடங்கி வைத்துள்ளனர்.

பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசும் முதல்வர் காதுகளுக்கு, ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த அவரது கட்சி பெண் தொண்டர் கடந்த 15 நாட்களாக கதறி வருவது கேட்கவில்லையா?

கட்சி நிர்வாகிகளே தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் பொதுவெளியில் பகிரங்கமாக தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ பெயரை அந்த பெண் குறிப்பிட்டும், அவரிடம் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை.

ஆனால், சினிமாவுக்கு முன்னோட்டமாக ஆடியோ வெளியீடு போல ஒரு விழாவை நடத்தியிருக்கிறார்கள்.

தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அக்கட்சியினர் தொடர்ந்து பொய் செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

குறிப்பாக திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தான் நடந்தது போல பரப்புகின்றனர்.

தமிழக முதல்வர் தனிமனித ஒழுக்கம், சமூக ஒழுக்கம் குறித்து இப்போது பேசுகிறார்.

இதன் மூலம் பொறுப்பில் இருந்து கைநழுவ நினைக்கிறாரா? சென்னை சிறுமி கொலை, ஸ்ரீவைகுண்டம் பெண் பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு இந்த அரசு பொறுப்பேற்க வேண்டும். ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏவிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும்.

தமிழகத்தில் தவெகவினர் மிரட்டல், கட்டாய வசூல் போன்ற அடாவடி செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆட்சியில் அமைச்சர்களின் ஆய்வுக் கூட்டம் தொடங்கி அனைத்தும் ரீல்ஸ் மயமாகி விட்டது.

சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் அதிகரித்துவிட்டன.

தமிழகத்தில் மின் தட்டுப்பாட்டுக்கு நிர்வாக சீர்கேடு தான் காரணம். ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் லாட்டரி மீண்டும் நடைமுறைக்கு வந்துவிடுவோம் என்ற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

அப்போது திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மகளிரணி மாவட்ட அமைப்பாளர் கவிதா தேவி, மாநகர அமைப்பாளர் ஜெயகனி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட அமைப்பாளர் அபிராமிநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *