டெல்லியில் ஜூன் 8-ம் தேதி நடைபெறும் இண்டியா கூட்டணிக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக திமுக அறிவிப்பு!!

சென்னை:
டெல்லியில் ஜூன் 8-ம் தேதி நடைபெறும் இண்டியா கூட்டணிக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸ், தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்து, அமைச்சரவையிலும் இடம்பிடித்துள்ளது.

இந்த சூழலில், இண்டியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் ஜூன் 8-ம் தேதி டெல்லியில் நடைபெறுவதாகவும், அதில் தோழமைக் கட்சிகள் அனைத்தும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது.

இதுகுறித்து விவாதிப்பதற்காக, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நேற்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

டி.ஆர்.பாலு, கனிமொழி, திருச்சி சிவா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதில் பேசிய நிர்வாகிகள், ‘‘அகிலேஷ், மம்தா, கேஜ்ரிவால் உள்ளிட்ட பல தலைவர்களும் காங்கிரஸ் மீது அதிருப்தியில் உள்ளனர்.

எனவே, காங்கிரஸ் இல்லாத வலிமையான புதிய கூட்டணியை திமுக தலைமையில் அமைக்க வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, திமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழக தேர்தலுக்குப் பிறகு, காங்கிரஸ் இழைத்த துரோகத்தால் திமுகவினர் மிகுந்த மனக்காயம் அடைந்துள்ளனர்.

அவர்களது உணர்வுக்கு மதிப்பு அளிக்கும் வகையில், ஜூன் 8-ம் தேதி டெல்லியில் காங்கிரஸ் பங்கேற்கும் இண்டியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காது.

அதேநேரம், கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் முன் வைக்கிற, நாட்டு நலனைப் பாதிக்கும் பிரச்சினைகளில் திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும்’ எனறு கூறப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *