சென்னை:
‘வீ தி லீடர்ஸ்’ இணையப்பக்கம் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கும். அ
தில், 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்தவுடன் மக்களிடம் நாம் அரசியலுக்கு வர வேண்டுமா என கருத்து கேட்போம். அதுவரை இலக்குடன் செயல்படுவோம் என அந்த இயக்கத்தின் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
‘வீ தி லீடர்ஸ்’ இயக்கத்தின் நிறுவனர் அண்ணாமலை யூடிபில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: நாம் அனைவரும் ஒரு குடும்பமாக ‘வீ தி லீடர்ஸில்’ இணைந்திருக்கிறோம். ஒரு மாற்றத்தை நோக்கி செல்கின்றோம்; அந்த மாற்றத்தை நாம் அடிப்படையிலிருந்து ஆரம்பித்திருக்கிறோம்.
மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் குறித்து நாம் பேச வேண்டும். மக்களின் அன்றாட வாழ்க்கை, விவசாயம், உணவுப் பொருட்கள், சுகாதாரமற்ற காற்று ஆகியவை குறித்துப் பேச வேண்டும். எந்தக் கட்சிகளும் இது பற்றி பேசுவது கிடையாது.
‘வீ தி லீடர்ஸ்’ இயக்கத்தை சரியான பாதையில் கொண்டுசெல்வேன்; இந்த இயக்கம் கட்சியாக மாறினால் இதன் தன்மை வேறு மாதிரி இருக்கும்.
முன்பிருந்த கட்சியிலோ, இப்போதோ யாருக்கும் போன் செய்து இயக்கத்தில் இணைய அழைக்கவில்லை.
இயக்கத்தில் தற்போது வரை சுமார் 18 லட்சம் பேர் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் இணைந்துள்ளனர். இயக்கத்தில் இணைந்த சகோதர, சகோதரிகளுக்கு நன்றி.
மக்களாக வந்து இணையும்போது அனைவரையும் வரவேற்பேன். ஓடிபி அடிப்படையில் உறுப்பினர்களை சேர்க்கும் ஒரே இயக்கம் ‘வீ தி லீடர்ஸ்’. ஜூலை மாதம் முதல் அரசியல் நடவடிக்கைகள் தொடங்கும்.
எனது இயக்கத்திற்கு தாமாக இளைஞர்கள் வரவேண்டும் என எதிர்பார்த்தேன். நமக்கு பாஸிடிவ் அரசியல் தான் தேவை.
வீ தி லீடர்ஸ் வெப்சைட் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கும். அதில் 50 லட்சம் உறுப்பினர்களை இணைந்தவுடன் மக்களிடம் நாம் அரசியலுக்கு வர வேண்டுமா என கருத்து கேட்போம். அதுவரை நாம் இலக்குடன் செயல்படுவோம்.
70 ஆயிரம் பேர் நாங்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோம் எனத் தெரிவித்துள்ளனர் அவர்களை நாம் எப்படி ஒருங்கிணைப்பது, அதில் பத்தாயிரம் பேர் கிட்டத்தட்ட தேர்தலில் போட்டியிட்டவர்கள். இதுகுறித்து நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டும்.
பஞ்சாயத்துகள் எப்படி செயல்படுகிறது. கிராமங்கள், நகரங்கள் குறித்த பல்வேறு அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
அவர்களுக்கு இது சம்பந்தமாக எதுவுமே தெரியாமல், அவர்களை எப்படித் தேர்தலில் நிற்க வைக்க முடியும். அவர்கள் எப்படி மக்களுக்கு உதவி செய்வார்கள்.
நான் இந்த ரசிகர் மன்றத்தில் இருந்தேன்; இன்று காலையில் சீட் கொடுத்தார்கள் எம்எல்ஏ ஆகிவிட்டேன் எம்பி ஆகிவிட்டேன் என்ற நிலை இருக்கிறது.
நான் யாரையும் இதன் மூலம் குறை சொல்ல விரும்பவில்லை. வீ தி லீடர்ஸ் மூலம் உறுப்பினர்களுக்கு முறையான வழிகாட்டுதல் கொடுக்கப்படும்.
ஒருவரே 50 வருடம் எம்பி, எம்எல்ஏவாக இருப்பது ஆகியவைகளை உடைக்க வேண்டும்.
பத்து வருடத்தில் உலகமே மாறிவிடுகிறது. இது குறித்து நாம் பின்னர் விரிவாகப் பேசுவோம். நமது அரசியல் நாளைய மாற்றத்துக்கான அரசியல்.
இயற்கை விவசாயம், போதைப் பொருட்களுக்கு எதிரான நமது நிலைப்பாடு, சாலை விபத்துக்களை சரி செய்ய வேண்டும்.
அறம் சார்ந்த அரசியல் மற்றும் வாழ்க்கை முறையைக் கொண்டு வருவோம்; அது பெரிய மாற்றத்தை கொண்டு வரும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.