கோவை ;
கோவையில் உள்ள ரயில் நிலையத்திற்கு உரிய வசதிகள் செய்து தரப்படுவதில்லை என பயணிகள் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் கோவை ரயில் நிலையத்தின் வழியாக இயக்கப்பட்டு வந்த 6 ரயில்களை, போத்தனூர், இருகூர் ரயில் நிலையங்கள் வழியாக கேரளாவிற்கு இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இது கோவை ரயில் பயணிகள், தொழில்துறையினர், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட மாநிலங்களில் இருந்து இயக்கப்படும் இந்த 6 ரயில்களையும் கோவை ரயில் நிலையம் வழியாக இயக்க வேண்டும் என ரயில்வே அதிகாரிகளிடம் அரசியல் கட்சியினர் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் ஆலப்புழா-சென்னை எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் டெல்லி கேரளா எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி திர்புர்கார் எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் பாட்னா எக்ஸ்பிரஸ், கொச்சுவேலி யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் உட்பட 6 ரயில்கள் இவ்வாறு பாதை மாற்றம் செய்யப்பட உள்ளன.
இந்த ரயில்களை கோவை ரயில் நிலையம் வழியாக இயக்க வலியுறுத்தி இன்று மாட்டு வண்டியில் சென்று மனு அளிக்கும் போராட்டம் நடத்தப்பட்டது. கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள கீதாகபே பகுதியில் இருந்து அனைத்து கட்சியைச் சேர்ந்தவர்கள் இரு மாட்டு வண்டியில் சென்று மனு அளித்தனர்.
இந்த போராட்டத்தை கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர். நடராஜன் துவக்கி வைத்தார். மேலும் பல்வேறு அரசியல் கட்சியினர் இதில் பங்கேற்றனர்.
மாட்டு வண்டியில் முழக்கங்களை எழுப்பியபடி மனு அளிக்க வந்தவர்கள், மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.