ஹாலண்ட், எம்பாப்பே இரட்டை கோல்!!

சென்னை:
நடப்பு ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் சுற்று ஆட்டத்தில் நட்சத்திர வீரர்களான நார்வே அணியின் எர்லிங் ஹாலண்ட், பிரான்சின் கிலியன் எம்பாப்பே, அர்ஜெண்டினாவின் மெஸ்ஸி ஆகியோர் தங்களது கேம் மேஜிக்கை நிகழ்த்தி உள்ளனர்.

அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடைபெறும் இந்த தொடர் ஹாலண்ட் பங்கேற்கும் முதல் உலகக் கோப்பை தொடர். எம்பாப்பே மூன்றாவது முறையாகவும், மெஸ்ஸி ஆறாவது முறையாகவும் இந்த தொடரில் பங்கேற்கின்றனர்.

இந்த முறை அதிக கோல் பதிவு செய்யும் வீரர்களில் இந்த மூவரின் பெயரும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு தகுந்த படியே மூவரும் தங்களது முதல் ஆட்டத்தில் விளையாடி உள்ளனர்.

அதோடு ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக கோல் பதிவு செய்த வீரர்களில் பட்டியலில் மெஸ்ஸி, எம்பாப்பே என இருவரும் முன்னேறி அசத்தியுள்ளனர்.

பிரான்ஸ் vs செனகல்

குரூப்-ஐ பிரிவில் இடம்பெற்றுள்ள பிரான்ஸ் மற்றும் செனகல் அணிகள் இந்த தொடரில் பலப்பரீட்சை மேற்கொண்டன. 2018-ல் சாம்பியன், 2022-ல் இரண்டாம் இடம் பிடித்த பிரான்ஸ் அணி மீது இந்த முறையும் அதே எதிர்பார்ப்பு.

கோப்பை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. மறுபக்கம் ஆப்பிரிக்க கண்டத்தின் செனகல் அணி.

அமெரிக்காவின் ஈஸ்ட் ரூதர்போர்டில் உள்ள நியூயார்க் நியூஜெர்சி மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்றது.

இந்த மைதானத்தில்தான் இந்த தொடரில் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 (ஜூன் 17) மணிக்கு இந்த ஆட்டம் தொடங்கியது.

இரண்டு அணிகளும் சம அளவில் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. முதல் பாதி ஆட்டத்தில் இரண்டு அணிகளும் கோல் பதிவு செய்யவில்லை.

இதில் பிரான்ஸ் அணி 90 நிமிடங்களுக்குள் இரண்டு கோல்களை பதிவு செய்து அசத்தியது.

ஸ்டாப்பேஜ் டைமாக கொடுக்கப்பட்ட 10 நிமிடங்களில் செனகல், பிரான்ஸ் என இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் பதிவு செய்தன. இதில் 90+6வது நிமிடத்தில் எம்பாப்பே பதிவு செய்த கோல் பலரையும் பிரமிக்க செய்துள்ளது.

இதே ஆட்டத்தின் 66-வது நிமிடத்தில் அவர் முதல் கோலை பதிவு செய்திருந்தார்.

இதன் மூலம் சர்வதேச அளவில் பிரான்ஸ் அணிக்காக அதிக கோல்கள் (58), உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் (14) பதிவு செய்த வீரர்களில் மூன்றாம் இடம் உள்ளிட்ட சாதனைகளை எம்பாப்பே படைத்திருந்தார்.

நார்வே vs ஈராக்

குரூப்-ஐ பிரிவில் இடம்பெற்றுள்ள நார்வே மற்றும் ஈராக் அணிகள் அமெரிக்காவின் பாஸ்டன் மைதானத்தில் விளையாடின. இந்த உலகக் கோப்பை தொடரின் ‘டார்க் ஹார்ஸ்’ ஆக நார்வே அணி பார்க்கப்படுகிறது.

சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு நார்வே அணி உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. இந்த சாதனை குறித்து பிரத்யேக சீரிஸ் ஒன்றும் முன்னணி ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

எர்​லிங் ஹாலண்ட், மார்ட்​டின் ஒடே​கார்ட் ஆகியோர் அணியின் முக்கிய வீரர்களாக மின்னுகின்றனர்.

இந்த ஆட்டத்தில் 530 பாஸ்களை மேற்கொண்டது நார்வே அணி. அதன் மூலம் ஆறு ஷாட்களை டார்கெட்டில் வைத்தது.

ஆட்டத்தின் 29-வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்தார் ஹாலண்ட். அதற்கடுத்த பத்தே நிமிடத்தில் பதில் கோலை பதிவு செய்தது ஈராக். மீண்டும் 43-வது நிமிடத்தில் பந்தை வலைக்குள் தள்ளி நார்வே அணியை முன்னிலை பெற செய்தார் ஹாலண்ட்.

இரண்டாவது பாதியில் நார்வே அணியின் லியோ, கோல் பதிவு செய்தார். கார்னரில் இருந்து வந்த பந்தை தலையால் வலைக்குள் அவர் தள்ளியிருந்தார்.

அதன் பின்னர் சுயகோல் ஒன்றை கொடுத்தது ஈராக். அதனால் 4-1 என ஆட்டத்தை வென்றது நார்வே. இப்போது கோல்கள் அடிப்படையில் ‘ஐ’ பிரிவில் பிரான்ஸ் அணியை புள்ளிப்பட்டியலில் நார்வே முந்தி முதலிடம் பிடித்துள்ளது.

அர்ஜெண்டினா vs அல்ஜீரியா

குரூப்-ஜே பிரிவில் நடப்பு உலக சாம்பியன் அர்ஜெண்டினா மற்றும் அல்ஜீரியா அணிகள் மோதின.

இந்த ஆட்டம் அமெரிக்காவில் உள்ள கன்சாஸ் சிட்டியில் நடைபெற்றது. இதில் அல்ஜீரியாவை 3-0 என்ற கணக்கில் பந்தாடியது அர்ஜெண்டினா. அந்த அணியின் மூன்று கோல்களையும் 38 வயதான மெஸ்ஸி பதிவு செய்திருந்தார்.

இந்த ஹாட்ரிக் கோல் மூலம் பல சாதனைகளை அவர் படைத்துள்ளார். இந்த ஆட்டம் அர்ஜெண்டினா அணிக்காக அவர் விளையாடிய 200-வது ஆட்டமாக அமைந்தது. இது அவர் பங்கேற்று விளையாடும் ஆறாவது உலகக் கோப்பை தொடர்.

இந்த மூன்று கோல்கள் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் பதிவு செய்த ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோஸ் சாதனையை மெஸ்ஸி சமன் செய்துள்ளார். இருவரும் 16 கோல்களுடன் முதலிடத்தில் உள்ளனர்.

இதோடு சர்வதேச கால்பந்து அரங்கில் 120 கோல்களுடன் அதிக கோல்கள் பதிவு செய்த வீரர்களில் அவர் இரண்டாம் இடத்தில் நீடித்து வருகிறார். முதலிடத்தில் 143 கோல்களுடன் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *