ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கும் கலைஞர்கள் உடலின் பாகங்கள் தெரியும் வகையில் உடைகள் அணியக் கூடாது – ஐகோர்ட் மதுரை அமர்வு நிபந்தனை!!

மதுரை:
ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கும் கலைஞர்கள் உடலின் பாகங்கள் தெரியும் வகையில் உடைகள் அணியக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நிபந்தனை விதித்துள்ளது.

தஞ்சாவூரைச் சேர்ந்த ராமசாமி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு:

தஞ்சாவூர் மாவட்டம் துருசுப்பட்டியில் ஸ்ரீ காளியம்மன் கோயில் திருவிழாவில் ஜூலை 3-ல் ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடத்த செங்கிப்பட்டி காவல் ஆய்வாளர் அனுமதி தரவில்லை. அதை ரத்து செய்து அனுமதி வழங்க உத்தரவிட கோரியிருந்தார்.

மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.விக்டோரியா கௌரி பிறப்பித்த உத்தரவு: கோயில் திருவிழாவில் ஆடல்-பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க மறுத்து காவல் ஆய்வாளர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

ஜூலை 3-ம் தேதி மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்படுகிறது.

ஆடல் பாடலில் ஆபாச நடனம், இரட்டை அர்த்த பாடல்கள், அரசியல் அல்லது சாதி, மத வெறுப்பை தூண்டும் பாடல்கள், பேச்சுகள், கோஷங்கள் இடம்பெறக் கூடாது.

மது உள்ளிட்ட போதைப்பொருட்கள் பயன்படுத்தக் கூடாது, பெண்களை கண்ணியக்குறைவாக சித்தரிக்கக் கூடாது.

ஆண் கலைஞர்கள் வேஷ்டி மேலாடையும், பெண் கலைஞர்கள் சேலை, தாவணி அல்லது சுடிதாரும் மேலாடையுடன் அணிய வேண்டும்.

கால், வயிறு, தொடை, நெஞ்சுப் பகுதி முழுவதுமாக மூடப்பட்டிருக்கும் வகையில் ஆடை அணிய வேண்டும். குழந்தைகள் முழுவதுமாக மூடப்பட்ட ஆடைகளை அணிய வேண்டும்.

கட்சிகளின் பெயரால் நன்கொடையோ பரிசுகளோ வழங்கப்படக் கூடாது. நிகழ்ச்சி முழுவதும் காணொலி பதிவு செய்யப்பட வேண்டும், நிர்ணயிக்கப் பட்ட நேரத்தையோ அல்லது நிபந்தனைகளையோ மீறினால் காவல் துறையினர் மூலம் நிகழ்ச்சியை நிறுத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *