அசாம் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 40 லட்சம் குடும்பங்களுக்கு மாநில அரசு தலா ரூ.9,000 விநியோகம்!!

குவாஹாட்டி:
அசாம் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 40 லட்சம் குடும்பங்களுக்கு மாநில அரசு தலா ரூ.9,000 வழங்கி உள்ளது.

அசாம், தமிழ்நாடு உட்பட 5 மாநில சட்டப் பேரவைகளுக்கான தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் ஓரிரு நாளில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அசாம் அரசு ‘ஒருனோதோய்’ (அசாம் மொழியில் சூரிய உதயம் அல்லது விடியல்) திட்டத்தின் கீழ் சுமார் 40 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.9,000 வழங்கியுள்ளது.

இதுகுறித்து குவாஹாட்டியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பேசியதாவது:

கடந்த 2020-ல் ஒருனோதோய் திட்டம் தொடங்கப்பட்டது அப்போது பொருளாதார ரீதியாக பின்தங்கிய 18 லட்சம் பயனாளிகளுக்கு மாதம் ரூ.830 வழங்கப்பட்டது.

பின்னர் ரூ.1,250 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது இந்த திட்டம் 40 லட்சம் பெண்களைச் சென்றடைந்துள்ளது.

இன்னும் 10 சதவீத தகுதியுள்ள பெண்கள் இதில் விடுபட்டுள்ளனர். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவர்களும் இதில் சேர்க்கப்படுவார்கள்.

இதுவரை இத்திட்டத்தின் கீழ் ரூ.17,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மட்டும் (நேற்று) பயனாளிகளின் வங்கிக் கணக்கில் கூடுதலாக தலா ரூ.9,000 வீதம் மொத்தம் ரூ.3,600 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மாதந்தோறும் வழங்கப்படும் தொகை மேலும் உயர்த்தப்படும்.

தற்போது மத்திய அரசு வழங்கும் இலவச அரிசியும் ரூ.100-க்கு பருப்பு, சர்க்கரை மற்றும் உப்பு வழங்கப்படுகிறது.

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படுவதுடன் 500 கிராம் டீ தூளும் வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் சர்மா தெரிவித்தார்.

ஒருனோதோய் திட்டத்தின் கீழ் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான 4 மாதத் தொகையுடன் (ரூ.5,000) ஏப்ரலில் வரும் அசாமிய புத்தாண்டு பண்டிகைக்கு ரூ.4,000 என மொத்தம் ரூ.9,000 வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.

இதுகுறித்து முதல்வர் சர்மா கூறும்போது, “இது 2020 முதல் நடைமுறை யில் இருக்கும் ஒரு திட்டம். இதற்கும் தேர்தலுக்கும் தொடர்பில்லை. இது தகுதி அடிப்படையில் வழங்கப்படும் ஒரு கருணைத் திட்டமாகும்” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *