சென்னை:
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட்டில் ரூ.15,037 கோடி முதலீட்டில் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (பேட்டரி) உற்பத்திக்காக முதல்வர் விஜய் முன்னிலையில் விக்ரம் சோலார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஒரகடம், வல்லம் ஆகிய 2 இடங்களில் சூரியஒளி மின்னழுத்த (Solar PV) தொகுதி உற்பத்தி ஆலைகளை விக்ரம் சோலார் குழுமம் நிறுவியுள்ளது.
மேலும், திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் சூரியஒளி மின்னழுத்த செல்கள் மற்றும் தொகுப்புகளுக்கான ஒருங்கிணைந்த உற்பத்தி வளாகத்தையும் நிறுவியுள்ளது.
இந்நிலையில், கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.15,037 கோடி முதலீட்டில் 2,670 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், விக்ரம் சோலார் நிறுவனத்தின் பேட்டரி உற்பத்தி ஆலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் முன்னிலையில் நேற்று மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்வில் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, தலைமைச் செயலர் சாய்குமார், தொழில் துறை செயலர் விஜயகுமார், வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் தீபக் ஜேக்கப், விக்ரம் சோலார் நிறுவனத்தின் தலைவர் ஞானேஷ் சவுத்ரி, தலைமை செயல் அலுவலர் அருண் மிட்டல், மூலதன முதலீட்டுத் திட்ட இயக்குநர் அஷ்வினி அகர்வால், இயக்குநர் குழுவின் ஆலோசகர் ஜே.எஸ்.பஜாஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.