திரிசூலம் பகுதியில் நான்கு மலை குன்றுகளுக்கு நடுவே, மிகவும் தொன்மை வாய்ந்த திரிசூலநாதர் கோவில்!!

சென்னை திரிசூலம் பகுதியில் நான்கு மலை குன்றுகளுக்கு நடுவே, மிகவும் தொன்மை வாய்ந்த திரிசூலநாதர் கோவில் அமைந்துள்ளது.

இந்த நான்கு மலைகளும் நான்கு வேதங்களாக கருதப்படுகின்றன. வேதங்களின் உட்பொருளாக, அதன் நடுவே சிவபெருமான் கோவில் கொண்டுள்ளார்.

இக்கோவில் இறைவன் திரிசூலநாதர் என்றும், இறைவி திரிபுரசுந்தரி என்றும் அழைக்கப்படுகிறார்கள். பிரம்மதேவர் வழிபட்ட தலம் என்பதால் ‘பிரம்மபுரி’ என்றும், சிவபெருமானுக்கு ‘பிரம்மபுரீஸ்வரர்” என்றும் பெயர் உள்ளது. இந்த ஆலயம் சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

கருவறையில் திருசூலநாதர் லிங்க வடிவில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அம்பிகை திரிபுரசுந்தரி, தனிச் சன்னிதியில் தெற்கு நோக்கி காட்சி தருகிறார்.

இவர் திருக்கரங்களில் அட்சத மாலையும், தாமரைப் பூவும் ஏந்தி உள்ளார். இதன்மூலம், ஞானத்தையும், செல்வத்தையும் ஒருசேர அருள்வதாக நம்பிக்கை.

நரசிம்மரின் உக்கிரத்தை தணிப்பதற்காக சிவ பெருமான் எடுத்த அவதாரமே ‘சரபேஸ்வரர்”. இங்குள்ள ஒரு அழகான தூணில் சரபேஸ்வரர் காட்சி அளிக்கிறார்.

பொதுவாக, சரபேஸ்வரருக்கு ‘சரபம்’ என்ற பறவையின் இறக்கை இருக்கும். ஆனால் இங்கு சரபேஸ்வரர் இறக்கை இல்லாமல் இரண்டு முகங்கள், இரு கைகளில் மான் மழு ஏந்தி, மற்ற இரு கைகளில் நரசிம்மரை பிடித்த வண்ணம் காட்சி தருகிறார்.

இத்தகைய அமைப்பில் சரபேஸ்வரரை காண்பது மிகவும் அரிது. இவருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் எம பயம் நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

தாம்பரத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிலும், திரிசூலம் ரெயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *