கோவை;
கோவை மாநகராட்சிக்கு நேரடி நியமன முறையில் 54 இளநிலை உதவியாளர்களை 2021ம் ஆண்டு பிப்ரவரி 8&ம் தேதி அவசரகதியில் நியமனம் செய்தார்கள்.
மாநகராட்சி பணி நியமன விதிகள் மற்றும் சீனியாரிட்டியை புறம் தள்ளி அன்றைய உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணிக்கு ஆதரவாக கோவை மாநகராட்சியின் முக்கிய அதிகாரிகள் கூட்டு சேர்ந்து இந்த நியமனத்தை செய்திருந்தார்கள். இது சம்பந்தமாக நமது தினபறவை நிருபர் குழு அன்றைய மாநகராட்சி ஆணையரிடம் இது குறித்து முறையிட்டனர்.
ஆனால் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் இந்த பதவி நியமனம் குறித்த உண்மைத்தன்மையை நாடறிய வேண்டும் என்ற நோக்கோடு சுமார் 8 மாதங்களுக்கும் மேல் புலனாய்வு செய்து ஆதாரங்களை திரட்டினோம்.
அதில் பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்தது. அதில் பத்திரிக்கையில் விளம்பரம் செய்யாமலேயே விளம்பரம் தந்ததாக போலியாக ஒரு pdf தயாரித்து ஆவணங்கள் தயார் செய்தும், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இருந்து சீனியாரிட்டி லிஸ்ட் வந்ததாக போலி ஆவணங்கள் தயார் செய்தும் ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்டோ ருக்கு நேர்காணலுக்கு தபால் அனுப்பியதாக போலி ஆவணங்கள் தயார் செய்தும் அதில் 650 பேர் விண்ணப்பித்ததாகவும் 400 விண்ணப் பங்களை ஏற்று 54 பேரை தேர்வு செய்ததாக ஆவணங்களை தயார் செய்தும், அன்றைய நாளிலேயே 54 பேருக்கும் மருத்துவ சான்றுகளை பெறாமலேயே பணி ஆணை கொடுத்து பணியில் அமர செய்திருந் தார்கள் என்ற பெரும் முறைகேடுகள் தெரிய வந்தது. இந்த 54 பேரில் சுமார் 40 பேர் வேலுமணிக்கு வேண்டப் பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்தனை ஆதாரங்களையும் சுமார் 8 மாதங்களுக்கு மேலாக தயார் செய்து 2022 ஜுலை 5&ம் தேதி நமது தினபறவை இதழில் ‘‘கோவை மாநகராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர் தேர்வில் நடைபெற்ற மெகா முறைகேடுகள் – முறைகேட்டிற்க்கு துணைபோன அதிகாரிகள் பட்டியல் – ஆதாரங்களுடன்’’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இதில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்களையும் விளம்பரம் வெளியிட்டதாக கூறப்பட்ட பத்திரிக்கையின் உண்மை பதிப்பின் நகலையும் முறைகேடு அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டபோலி றிபீயீ நகலையும் மேலும் இந்த முறைகேட்டிற்கு துணை போன அதிகாரிகளின் பெயர்களையும் வெளியிட்டிருந்தோம்.
இந்த ஆதரங்களை அடிப்படையாக கொண்டு கோவை மாநகராட்சி அதிகாரிகளால் பதவி உயர்வு மறுக்கப்பட்டு மனக்குமுறலில் இருந்த தூய்மை மேற்பார்வையாளர்கள் சிலரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தங்களுக்கு நிவாரணம் வேண்டியும் இந்த பணி நியமனத்தை எதிர்த்தும் வழக்கு தொடுத்திருந்தனர்.
இந்த வழக்கை நீர்த்துப்போக செய்வதற்காக வழக்கு தொடுத்தவர்கள் மீது பல வகைகளிலும் தொல்லை கொடுத்தனர் அதிகார வர்க்கத்தினர்.
ஆனாலும் மனம் தளராமலும் நீதி வெல்லும் என்ற நம்பிக்கையிலும் பணத்திற்க்கு ஆசைப்படாமலும் காத்திருந்தனர் வழக்கு தொடுத்த கோவை மாநகராட்சி பணியாளர்கள். இந்நிலையில் வழக்கை தீவிரமாக பரிசீலனை செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செந்தில்குமார் திரு.எஸ்.எம்.சுப்ரமணியம் அமர்வு ஜுன்18-ல் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கினார்கள். அதில் ‘‘பின் வாசல் வழியாக வந்தவர்கள் பின் வாசல் வழியாகவே செல்ல வேண்டும்’’ தேர்வாணையம் மற்றும் தேர்வு நடைமுறைகள் எதுவும் பின் பற்றாமல் 54 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் 54 பேரின் நியமனம் ரத்து செய்யப்படுகிறது. மேலும் இந்த முறைகேட்டிற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கினர்.
இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து புறவாசல் வழியாக பணியில் சேர்ந்தவர்கள் உச்சநீதிமன்றம் சென்றார்கள்.
பணம் மற்றும் படை பலம் உள்ளதால் இந்த வழக்கை நீர்த்து போக செய்து விடலாம் என்ற மனப்பான்மையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தவர்களுக்கு அங்கு பலத்த அதிர்ச்சி காத்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திரு.விஸ்வ நாதன், திரு.அருண்பாலி, 440 விண்ணப்பங்களை ஒரே இரவில் பரிசீலித்து 54 பேருக்கு உடனே எப்படி பணி -ஆணை வழங்க முடியும், இதில் விதிமீறல்கள் நடந்தது அப்பட்டமாக தெரிகிறது.
வாய்ப்புகள் என்பது எல்லோருக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும். சட்டபடி தான் பணி நியமனங்கள் நடைபெற வேண்டும். ஆகையால் இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்கிறோம் 54 பேரின் பணி நியமன ஆணையை உடன டியாக ரத்து செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு மேல் முறையீடு மனுவை தள்ளுபடி செய்தனர்.
‘‘எவ்வளவு காலமானாலும் நீதி வெல்லும்’’ என்ற சொல்லுக்கு ஏற்ப காலதாமதமானாலும் நீதி வென்றுள்ளது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பின் அடிப்படையில் முறைகேடாக பணியில் சேர்ந்த 54 பேரை உடனடியாக பணி நீக்கம் செய்தும் இந்த முறை கேட்டிற்க்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் அத்தனை பேர் மீதும் துறை ரீதியான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் நமது கோவை மாநகராட்சி ஆணையர்.
அப்படி நடவடிக்கை எடுத்தால்தான் முறைகேடாக பணியில் யாரும் சேர தயங்குவார்கள். அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் இனி எந்த ஒரு அதிகாரியும் முறைகேட்டிற்கு துணை நிற்க மாட்டார்கள்.
கோவை மாநகராட்சி ஆணையர் உடனே நடவடிக்கை எடுத்து உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்துவார் என்று எதிர்பார்க்கிறோம்.