இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா!!

அட்லாண்டா:
பிஃபா உலகக் கோப்பை கால்​பந்து தொடர் இறுதிக்​கட்​டத்தை எட்​டி​யுள்​ளது. அமெரிக்​கா​வில் அட்​லாண்​டா​வில் உள்ள மெர்​சிடீஸ் பென்ஸ் மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற 2-வது அரை இறுதி ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான அர்ஜெண்டினா, முன்​னாள் சாம்​பிய​னான இங்​கிலாந்தை எதிர்த்து விளையாடியது.

முதல் பாதி ஆட்​டம் விறு​விறுப்​பாக இருந்​தது, ஆனால் கோல் அடிப்​ப​தற்​கான வாய்ப்​பு​கள் மிகக் குறை​வாகவே அமைந்தன.

இரு அணி​களும் ஒன்​றையொன்று மிகச் சரி​யாக எதிர்​கொண்டு தடுத்​த​தால் கடுமை​யான உத்​தி​களுக்​கான போராக மாறியது.

33-வது நிமிடத்​தில் இங்கிலாந்து அணி​யின் டெக்​லான் ரைஸ் வீசிய ஃபிரீ-கிக்கை ஜான் ஸ்டோன்ஸ் கோல் கம்​பத்​துக்கு அருகே தலையால் முட்டி கோல் அடிக்க முயன்​றார்.

ஆனால் அதற்கு பலன் கிடைக்​க​வில்​லை. இது மிக நெருக்​க​மான கோல் வாய்ப்பாக அமைந்​தது. முதல் பாதி ஆட்​டத்​தில் இரு அணி​கள் தரப்​பில் கோல் ஏதும் அடிக்​கப்​பட​வில்​லை.

2-வது பாதி ஆட்​டம் தொடங்​கிய 10-வது நிமிடத்​தில் இங்​கிலாந்து அணி தனது முதல் கோலை அடித்​தது.

55-வது நிமிடத்​தில் ஹாரி கேன் ஆடு​களத்​தின் பின் பகு​திக்கு வந்து மார்​கன் ரோஜர்ஸை நோக்கி பந்தை அனுப்ப முயன்​றார், ஆனால் அர்​ஜெண்​டினா வீரர் லிசாண்ட்ரோ மார்​டினெஸ் அந்​தப் பந்தை அந்​தரத்​தில் அக்​ரோ​பாட்​டிக் முறை​யில் தடுத்து வெளி​யேற்​றி​னார்.

அங்​கிருந்து தப்பிய பந்தை கைப்​பற்​றிய டெக்​லான் ரைஸ், அதை மீண்​டும் ரோஜர்​ஸிடம் அனுப்​பி​னார்.

ரோஜர்ஸ் கோல் பகு​தியை நோக்கி அடித்த அசாத்​தி​ய​மான கிராஸை, மொலி​னா​வுக்கு பின்​னால் இருந்து மின்​னல் போல் புகுந்த அந்​தோனி கார்​டன் அர்​ஜெண்​டினா அணி​யின் எமிலியானோ மார்​டினெஸைக் கடந்து மிக அழகாகக் கோலாக மாற்றினார். இதனால் இங்​கிலாந்து அணி 1-0 என முன்​னிலை பெற்​றது.

இந்த கோலை தொடர்ந்து அர்​ஜெண்​டினா தனது ஆட்ட வியூகத்தை மாற்​றியது.

முன்​னோக்​கிச் சென்று தீவிர​மாகத் தாக்​கத் தொடங்​கியது. அதே நேரத்​தில், இங்​கிலாந்து அணி தங்​களின் இந்த ஒற்றை கோல் முன்னிலை​யைப் பாது​காக்​கும் உறு​தி​யுடன், தற்​காப்பு அரணை இன்​னும் பலப்​படுத்​திய நிலை​யில் தாக்​குதல் ஆட்​டத்​தில் இருந்து பின்​வாங்​கியது.

இதை சாதக​மாக பயன்​படுத்​திக் கொண்ட அர்ஜெண்​டினா அணி கடைசி 7 நிமிடங்​களில் ஆட்​டத்​தின் போக்கை தலைகீழாக மாற்​றியது.

85-வது நிமிடத்​தில் இங்​கிலாந்து அணி​யின் தற்​காப்பு அரணை உடைத்து அர்​ஜெண்​டினா பதிலடி கொடுத்​தது.

லயோனல் மெஸ்ஸி​யிடம் இருந்து பந்தை பெற்ற என்ஸோ பெர்​னான்​டஸ் 25 அடி தூரத்​தில் இருந்து வலு​வாக அடித்த ஷாட் இங்​கிலாந்து அணி​யின் கோல்​கீப்​பர் பிக்​போர்​டின் தடுப்பை கடந்து கோல் போஸ்ட்​டின் கீழ் இடது கார்​னரை துளைத்​தது. இதனால் ஆட்​டம் 1-1 என சமநிலையை எட்​டியது.

இதன் பின்​னர் ஆட்​டம் தங்​களுக்​குச் சாதக​மாக மாறியதை உணர்ந்த அர்​ஜெண்​டினா அணி​யின் பயிற்​சி​யாள​ரான லயோனல் ஸ்கலோனி, புதிய தாக்​குதல் ஆட்​டக்​காரர்​களைக் களமிறக்​கி​னார்.

ரோட்​ரிகோ டி பால் மற்​றும் லவ்​தாரோ மார்​டினெஸ் ஆகிய இரு​வரின் வரு​கை​யும் அர்​ஜெண்​டி​னா​வின் தாக்​குதல் ஆட்​டத்​துக்கு புதிய ஆற்​றலை வழங்​கியது.

காயங்​களுக்கு இழப்​பீ​டாக வழங்​கப்​பட்ட 90+2-வது நிமிடத்​தில் அர்​ஜெண்​டினா அணி​யின் வீரர் அலெக்​சிஸ் மேக் அலிஸ்​டர் உதைத்த பந்து கோல் போஸ்ட்​டில் பட்​டுத் தெறிக்க, அங்​கிருந்து தப்​பிய பந்தை மிக வேக​மாகத் தன்​வசப்​படுத்​திய லயோனல் மெஸ்​ஸி, அதை 6 அடி தூர பாக்ஸ் பகு​திக்​குள் தூக்கி அடித்​தார்.

அங்கு வேக​மாக நுழைந்த பதிலி வீர​ரான லவ்​தாரோ மார்​டினெஸ் பந்தை தலை​யால் முட்டி கோல் அடிக்க இங்​கிலாந்து அணி அதிர்ச்​சி​யில் உறைந்​தது. இந்த கோல் காரண​மாக அர்​ஜெண்​டினா 2-1 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்று இறு​திப் போட்​டிக்கு முன்​னேறியது.

வரும் 20-ம் தேதி அதி​காலை 12.30 மணிக்கு நியூ​யார்க் நகரில் உள்ள நியூ ஜெர்சி மைதானத்​தில் நடை​பெறும் இறு​திப் போட்​டி​யில் 3 முறை சாம்​பிய​னான அர்​ஜெண்​டினா அணி, 2010-ம் ஆண்டு சாம்​பிய​னான ஸ்பெ​யின் அணி​யுடன் பலப்​பரீட்சை நடத்​துகிறது.

முன்​ன​தாக 19-ம் தேதி அதி​காலை 2.30 மணிக்கு மியாமி கார்​டனில் நடை​பெறும் 3-வது இடத்​துக்​கான ஆட்​டத்​தில் பிரான்ஸ் – இங்​கிலாந்து அணி​கள் மோதுகின்​றன.

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி கேன் கூறும்போது, “அணி, ஊழியர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவருக்காகவும் என் மனம் உடைந்துபோயுள்ளது. நாங்கள் இந்த இடத்துக்கு வருவதற்கு கடினமாக உழைத்தோம்.

வீரர்கள் தங்களின் ரத்தம், வியர்வை, கண்ணீர் என அனைத்தையும் சிந்திப் போராடினார்கள். ஆனால், இப்படி இறுதித் தருணத்தில் வெற்றியைத் தவறவிட்டது எங்களை பாதித்துள்ளது” என்றார்.

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் கடந்த 1986-ம் ஆண்டு தொடரின் கால் இறுதியில் டீகோ மரடோனா அடித்த ‘ஹேண்ட்பால்’ கோல் மற்றும் 1998-ம் உலகக் கோப்பையில் டேவிட் பெக்காம், டீகோ சிமியோனியை உதைத்ததற்காக சிவப்பு அட்டை காட்டப்பட்டு ஆடுகளத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு இங்கிலாந்து சந்தித்த பெனால்டி ஷூட்-அவுட் தோல்வி ஆகிய வரலாற்றுச் சம்பவங்களைப் போலவே, தற்போதைய அரை இறுதி போட்டியின் தோல்வியும் இங்கிலாந்து அணிக்கு தீரா ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் தாமஸ் டுஹெல் கூறும்போது, “ அர்ஜெண்டினா அதிக ரிஸ்க்கை எதிர்கொண்டு, ஆட்டத்தின் வேகத்தை அதிகரித்து விளையாடியது.

தங்களுக்கு இழப்பதற்கு இனி எதுவுமே இல்லை என்ற எண்ணம் அவர்களிடம் இருந்திருக்கலாம், அது அவர்களை பயமுமின்றி சுதந்திரமாக விளையாட வைத்தது.

ஆனால், நாங்கள் இழந்துவிடக்கூடாது என்ற பயத்துடன் விளையாடியதால் தாக்குதல் ஆட்டத்தில் இருந்து பின்வாங்க நேரிட்டது” என்றார்.

நடப்பு உலகக் கோப்பை கால்​பந்து தொடரில் நேற்று இங்​கிலாந்து அணிக்கு எதி​ரான அரை இறுதி ஆட்​டத்​தில் அர்​ஜெண்​டினா அணி​யின் நட்​சத்​திர​மான லயோனல் மெஸ்ஸி கோல்​கள் அடிக்​கா​விட்​டாலும், 2 கோல்​களை அடிப்​ப​தற்கு உதவி​யாக இருந்​தார்.

தேசிய அணி, கிளப் ஆகிய​வற்​றுக்​காக மெஸ்ஸி கடைசி​யாக விளை​யாடிய 13 ஆட்​டங்​களில் 14 கோல்​களை அடித்து அசத்தி உள்​ளார். மேலும் 11 கோல்​களை அடிக்​க​வும் உதவி​யுள்​ளார்.

இங்​கிலாந்து அணிக்கு எதி​ரான அரை இறுதி ஆட்​டத்​தில் 0-1 என பின்​தங்​கிய நிலை​யில் இருந்த நிலை​யிலும் நடப்பு சாம்​பியனுக்கு தகுந்​த​படியி​லான செயல்​திறனை வெளிப்​படுத்தி அனை​வரை​யும் மீண்​டும் ஒரு முறை வியக்க வைத்​தது அர்​ஜெண்​டினா அணி.

கடைசி 7 நிமிடங்​களில் 2 கோல்​களை அடித்து வெற்​றியை தங்​களது பக்​கம் இழுத்​தது லயோனல் மெஸ்ஸி அன்ட் கோ. அந்த அணி 15 முறை கோல் அடிப்​ப​தற்​கான முயற்​சிகளை மேற்கொண்டது.

கோல் அடிக்​கும் வாய்ப்​பு​கள் பலமுறை முறியடிக்​கப்​பட்ட போதி​லும் எந்த சூழ்​நிலை​யிலும் பதற்​றம் அடை​யாமலும், போராட்ட குணத்தை விட்​டுக்​கொடுக்​காமலும் அர்​ஜெண்​டினா அணி விளை​யாடிய விதம் வெகு​வாக ரசிக்​கும்​படி அமைந்​தது.

கால் இறுதி போட்​டி​யிலும் அர்​ஜெண்​டின அணி, எகிப்​துக்கு எதி​ராக 0-2 என்ற கணக்​கில் பின்​தங்​கிய நிலை​யில் இருந்து இறு​திக்​கட்ட நிமிடங்​களில் மீண்டு வந்து வெற்றி கண்​டிருந்​தது.

நடப்பு உலகக் கோப்பை கால்பந்து தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி அர்ஜெண்டினாவிடம் தோல்வி அடைந்தது.

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் இங்கிலாந்து அணி அரை இறுதி ஆட்டத்தில் தோல்வி அடைவது இது 3-வது முறையாகும். இதற்கு முன்னர் 1990-ல் ஜெர்மனியிடமும் 2018-ல் குரோஷியாவிடமும் இங்கிலாந்து அணி அரை இறுதியில் தோல்வி கண்டிருந்தது.

அர்​ஜெண்​டி​னா​வின் நட்​சத்​திர​மான லயோனல் மெஸ்ஸி தான் விளை​யாடிய தொடர்ச்​சி​யான 11 உலகக் கோப்பை போட்​டிகளி​லும் கோல் அல்​லது கோல் அடிக்​க உதவி செய்​துள்​ளார்​. 1966-ம்​ ஆண்​டுக்​கு பிறகு எந்​தவொரு வீர​ராலும்​ படைக்​கப்​ப​டாத மிக நீண்​ட ​சாதனை இதுவாகும்.

அர்​ஜெண்​டி​னா​வுக்கு எதி​ரான அரை இறுதி ஆட்​டத்​தில் இங்​கிலாந்து அணி வெற்றி பெறும் சூழ்​நிலை​யில் இருந்த போதி​லும் கடைசி 7 நிமிடங்​களில் தோல்வி அடைந்​தது.

இதற்கு அந்த அணி தற்​காப்பு ஆட்​டத்தை கையில் எடுத்​ததே காரண​மாக அமைந்​தது. 55-வது நிமிடத்​தில் கோல் அடித்த அந்த அணி அதன் பின்​னர் கோல் அடிப்​ப​தற்கு 5 முறை மட்​டுமே முயற்சி எடுத்​தது.

இந்த தோல்​வி​யால் 1966-ம் ஆண்​டுக்கு பிறகு கோப்​பையை வெல்​லும் கனவுடன் பயணித்த இங்​கிலாந்து அணி இம்​முறை​யும் ஏமாற்​றம் அடைந்​தது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *