சென்னை:
கார்கில் போர் வெற்றி தினத்தை ஒட்டி சென்னை போர் நினைவுச் சின்னத்தில் ராணுவ அதிகாரிகள் மரியாதை செலுத்தினர். ஆளுநர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி தெரிவித்தனர்.
கடந்த 1999-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் பகுதியில் உள்ள டைகர் மலையை ஆக்கிரமித்தது.
இதையடுத்து பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்த்து இந்திய ராணுவம் போரிட்டது. மே மாதம் தொடங்கிய போர் ஜூலை வரை நடைபெற்றது.
இப்போரில் இந்திய ராணுவம் வெற்றி பெற்றது. ஜூலை 26-ம் தேதி கார்கில் பகுதியில் இந்திய கொடியை நமது ராணுவம் நிலைநாட்டியது. இப்போரில் 527 வீரர்கள், தங்களது இன்னுயிரை நாட்டுக்காக தியாகம் செய்தனர்.
இதையடுத்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி கார்கில் போர் வெற்றி தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்று இந்த ஆண்டுடன் 27 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
இந்நிலையில் இந்த ஆண்டு கார்கில் போர் வெற்றி தினமான நேற்று, சென்னை ராஜாஜி சாலையில் அமைந்துள்ள போர் நினைவுச் சின்னத்தில் இந்திய ராணுவத்தின் தக் ஷின பாரத் பகுதியின் தலைமை தளபதி லெப்டினென்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி, தாம்பரம் விமானப்படை நிலையத் தலைவர் ஏர் கமடோர் தபன் ஷர்மா, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்படை பொறுப்பு அதிகாரி கமடோர் சுவரத் மகோன் உள்ளிட்ட முப்படைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
நேற்றைய தினம் விடுமுறை நாள் என்பதால் பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியைப் பார்க்க பார்வையாளராக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
தொடர்ந்து கார்கில் வெற்றி தினத்தையொட்டி இருசக்கர வாகனப் பேரணியை லெப்டினென்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி தொடங்கி வைத்தார்.
இதற்கிடையே ஆளுநர், அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்ட செய்திகளில் கூறியிருப்பதாவது:
ஆளுநர் அர்லேகர்: பகைவர்கள் கார்கில் பகுதியை கைப்பற்றிய நிலையில், பாரதம் ஒன்றிணைந்து ஆக்கிரமிப்பாளர்களை அடித்து விரட்டிய நாள்.
இன்றைக்கு பாரதம் தற்சார்பு நாடாக தழைத்ததற்கு கார்கிலில் சிந்திய குருதியே காரணம். கனவிலும் மறவோம் கார்கிலின் வெற்றியை.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: கார்கில் போரில் கடுமையான சூழலிலும் ஒப்பற்ற துணிச்சல், மன உறுதியுடன் இந்தியாவைக் காத்த வீரர்களுக்கு நம் இதயப்பூர்வமான அஞ்சலியை செலுத்துவோம். நாட்டுக்காக தங்கள் இன்னுயிரை ஈந்த மாவீரர்களின் குடும்பங்களுக்கு நாம் என்றும் கடமைப்பட்டுள்ளோம்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: கார்கில் வெற்றி தினத்தில் நாட்டின் பாதுகாப்புக்காக தங்களின் இன்னுயிரை அர்ப்பணித்த அனைத்து தியாகிகளுக்கும் அஞ்சலி செலுத்துவோம்.
ஒப்பற்ற வீரம், மன உறுதியுடன் போராடி நாட்டின் இறையாண்மையைக் காத்த நம் வீரர்களின் தியாகம் இந்திய வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.