”செல்வாக்கு மிக்க நடிகர் என்பதால் அவரை பார்ப்பதற்கு எல்லோரும் வருவார்கள்” அவர் சிவகாசிக்கு வந்தால் கூட நானும் ஓரமாக நின்று அவரை பார்ப்பேன் – ராஜேந்திர பாலாஜி

சிவகாசி
தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் சிவகாசிக்கு வந்தால் நானும் ஒரு ஓரமாக நின்று அவரை பார்ப்பேன், அவரது பேச்சைக் கேட்பேன் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டியளித்துள்ளார்.

சிவகாசி அருகே திருத்தங்கலில் அதிமுக சார்பில் பாக( பூத்) செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமனம் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, “அதிமுகவில் நடைபெறும் பூத் கமிட்டி கூட்டம்தான் ஒரிஜினாலிட்டி. தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் நடத்தியது பூத் கமிட்டி கூட்டம் கிடையாது.

அது ஒரு பொதுக்கூட்டம். விஜய் பூத் முகவர்கள் போர் வீரர்கள் என்றால், அதிமுக பூத் முகவர்கள் அனைவரும் பல களம் கண்ட போர்ப்படை தளபதிகள். வெல்லப்போவது யார்? என்பதை மக்கள் முடிவு எடுத்து கொள்ள வேண்டும்.

விஜய் ஒரு மிகச் சிறந்த நடிகர். செல்வாக்கு மிக்க நடிகர் என்பதால் அவரை பார்ப்பதற்கு எல்லோரும் வருவார்கள். அவர் சிவகாசிக்கு வந்தால் கூட நானும் ஓரமாக நின்று அவரை பார்ப்பேன்.அவரது பேச்சை கேட்பேன். அதையெல்லாம் வைத்து ஒரு முடிவுக்கு வர முடியாது. கூட்டம் அனைத்தும் வாக்குகளாக மாறாது.

திமுகவிற்கு ஆதரவு தெரிவித்து தேர்தல் நேரத்தில் நடிகர் வடிவேலுக்கு கூடிய கூட்டத்தை கண்டு நாங்களே அரண்டு போனோம். ஆனால் அந்த தேர்தலில் நான் வெற்றி பெற்றேன். நடிகர்களுக்குகூடும் கூட்டமெல்லாம் எம்.ஜி.ஆருடன் முடிவடைந்து விட்டது.

எம்ஜிஆர் தனது 20 ஆண்டு அரசியலில் பல கருத்துக்களை திரைப்படம் மூலமாக எடுத்து சொல்லி இளைஞர்களை பக்குவப்படுத்தி, அரசியலில் நாட்டு மக்களின் மீது அக்கறை கொண்டவர்களாக மாற்றி அரசியல் அரங்கில் விளையாட வைத்து அதற்கு பின்னர் எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்ததால் மிகப்பெரிய வெற்றி பெற்றார். எம். ஜி.ஆரை போல் அனைவரையும் நினைப்பது மிகப்பெரிய தவறு.

அது நடக்கவே நடக்காது வாய்ப்பே கிடையாது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று வரும் இளைஞர்கள், பெண்கள், படித்த பட்டதாரிகள் அனைவரும் மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும், எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வருகிறார்கள்.

அதிமுகவின் பூத் கமிட்டி முகவர்கள் அனைவரும் விருச்சிகமாக வளரக்கூடிய ஆணித்தனமான விதைகள். இளைஞர்கள் தான் அதிமுகவின் மிகப்பெரிய வெற்றியை தந்து எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக உள்ளார்கள்.

திமுகவை எதிர்க்கும் எந்த கட்சியும் அதிமுக கூட்டணியில் சேரலாம். எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராகவும், தளபதியாகவும் ஏற்றுக்கொள்ளும் கட்சிகளோடு கூட்டணி வைக்க எடப்பாடி பழனிச்சாமி தயாராக உள்ளார்.

அதைத்தான் அதிமுக தொண்டர்களும் விரும்புகிறார்கள். திமுகவின் எதிர்ப்பாளர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்பதுதான் எடப்பாடி பழனிச்சாமியின் கொள்கை, எண்ணம்.

அந்த கொள்கையில் தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் வரலாம்.

அதிமுகவிற்கு யாராலும் பாதிப்பு வராது. நாட்டு மக்களுக்கு சிறப்பாக சேவை செய்யும் தளமாக அதிமுக இருக்கும் என இளம் வாக்காளர்களும் கருதுவதால் அதிமுகவின் பக்கமே இளைஞர்கள் கூட்டம் அதிகமாக வரும்” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *