தமிழக மக்கள் மனதில் யார் இருக்கிறார்? என்பது தொடர் பாக சட்டப்பேரவையில் திமுக-தவெக இடையே காரசார விவாதம்!!

சென்னை:
தமிழக மக்கள் மனதில் யார் இருக்கிறார்? என்பது தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக-தவெக இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:

பேரவைத்தலைவர் ஜேசிடி.பிரபாகர்: சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. எனவே, அனைத்து உறுப்பினர்களும் பேசும்போது கண்ணியத்தைக் கடைபிடிக்க வேண்டும்.

சுகுமார் (தவெக): நாங்கள் கூலாக (சாதாரணமாக) இருக்கிறோம் என்று சொன்னார்கள். எங்கள் மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை என்பதால் கூலாகத்தான் இருக்கிறோம். இந்த 5 ஆண்டுகளை கடந்து அடுத்த தேர்தலை சந்திக்கும் போதும் கூலாகவே இருப்போம்.

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி: எங்கள் முன்னாள் அமைச்சர் 5 ஆண்டுகளாக டென்ஷனில் இருந்தோம் என சொன்னார். அதற்கு பதில் கொடுக்கும்போது நீர்வளத்துறை அமைச்சரும் நிம்மதியாக தூங்க முடியவில்லை.

எங்களுக்கு ஒவ்வொரு நிமிடமும் டென்ஷனாக இருக்கிறது என கூறினார். எனவே, மீண்டும், மீண்டும் அதை சொல்ல வேண்டாம். ஏனெனில் உங்களுக்கும் சிபிஐ, வருமானவரி வழக்குகள் இருக்கின்றன.

அமைச்சர் ஆனந்த்: சிபிஐ வழக்கு இருக்கிறது என்பது சரிதான். ஆனால், எங்கள் டென்ஷன் என்பது வேறு. எங்கள் தலைவர் மக்கள் பிரச்சினை என்ன இருக்கிறது. அதை பார்க்கிறீர்களா? எனகேட்பார். அதற்குதான் நாங்கள் டென்ஷனாக இருப்போம் என சொன்னேன். பயமுறுத்தும் விதமாக அதை சொல்லவில்லை.

தற்போது முதல்வரிடம் இருந்து செல்போன் அழைப்பு வந்தாலே பயமாக இருக்கிறது. ஏதாவது தொகுதியில் சின்ன விஷயமாக இருந்தாலும் அதை ஏன் செய்யவில்லை என்று கேட்கக்கூடியவர் எங்கள் முதல்வர்.

உதயநிதி: அப்போதைய எங்கள் முதல்வரும் பத்திரிகைகளைப் பார்த்து துறை சம்பந்தமான செய்திகள் வந்துள்ளதா என கேட்டு அதை உடனே நிவர்த்தி செய்யுங்கள் என்று சொல்லுவார். அதே எண்ணத்துடன்தான் எங்கள் உறுப்பினரும் பேசினார்.

சுகுமார்: முன்னாள் அமைச்சர் பேசும்போது, திட்டங்களில் எங்கள் முன்னாள் முதல்வர் எங்கும் இருக்கிறார் என்றார். ஆனால், மக்கள் மனதில் இல்லை.மக்கள் மனதில் இருந்தால் மட்டுமே சட்டப் பேரவைக்குள் வரமுடியும்.

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (திமுக): உறுப்பினர் கடந்தஆட்சியில் யாருடன் சுற்றிக் கொண்டிருந்தார் என்பது உலகுக்கு தெரியும். முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியுடன் கூடவே இருந்தார். மக்கள் பிரச்சினைகளைப் பார்க்க வேண்டுமென்ற டென்ஷனில் நாங்கள் இருந்தது அவருக்கும் தெரியும்.

சுகுமார்: நான் தவறான கருத்தை எதுவும் சொல்லவில்லை. மக்கள் நினைக்கிற தைத்தான் பேசுகிறேன்.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் கே.என்.நேரு: கடந்தகால ஆட்சியின் முதல்வர் மக்கள் மனதில் இல்லை என சொன்னார். நீங்கள் வெற்றி பெற்றது 108 இடங்கள். உங்களுக்கு எதிரில் இருப்பவர்கள் அதிக இடங்களை பெற்றுள்ளனர்.

ஆனால், தனித்தனியாக பிரிந்திருக்கிறார்களே தவிர, உங்களைவிட அதிகமான வாக்குகளை பெற்று வந்துள்ளனர். எங்களிடம் இருந்தவர்கள் தான் உங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அவை முன்னவர் செங்கோட்டையன்: 108 பெரியதா? 59 பெரியதா? என்பதை சிறிய குழந்தையை கேட்டால்கூட 108 தான் பெரியது என்று சொல்லும். 97 உறுப்பினர்களை வைத்து ஆட்சியை நடத்தியவர்கள் நீங்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. இவ்வாறு விவாதம் நடந்தது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *