டெல்லியில் மார்ச் 19 முதல் 22-ம் தேதி வரை ‘பாரத் மின்சார உச்சி மாநாடு 2026 !!

சென்னை:
டெல்லியில் மார்ச் 19 முதல் 22-ம் தேதி வரை ‘பாரத் மின்சார உச்சி மாநாடு 2026’ நடைபெறவுள்ளது என, பொறியியல் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது. ‘பாரத் மின்சார உச்சி மாநாடு 2026’ குறித்த அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், பொறியியல் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சிலின் தென்மண்டல துணைத் தலைவர் சஷி கிரண் லூயிஸ், முதுநிலை இயக்குநர் சந்தன் அஸ்வத் மற்றும் தேசிய மின் கட்டமைப்பு கழகம், தேசிய அனல்மின் கழகம், தேசிய நீர்மின் கழகம், ஊரக மின்மயமாக்கல் கழகம் உள்ளிட்ட மத்திய மின்சார அமைச்சகத்தின் துணை நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டு, தமிழகத்தில் உள்ள புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியாளர்கள், மின்சாரம் சார்ந்த தொழில் முனைவோருடன் கலந்துரையாடினர்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் நிர்வாகிகள் கூறியதாவது: மின்மயமாக்கல் வளர்ச்சி நிலைத் தன்மையை மேம்படுத்துதல், உலகளவில் இணைத்தல் என்ற கருப்பொருளில் பாரத் மின்சார உச்சி மாநாடு 2026 டெல்லியில் மார்ச் 19 முதல் 22-ம் தேதிவரை நடைபெற உள்ளது.

மத்திய மின்சாரம் மற்றும் தொழில்துறை இணைந்து நடத்தும் இந்த மாநாட்டை, மின்சார அமைச்சகத்தின் துணை நிறுவனங்களின் ஆதரவோடு, பொறியியல் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் ஒருங்கிணைக்கிறது.

இந்த உச்சிமாநாடு, உலகளாவிய கொள்கை வகுப்பாளர்கள், தொழில் தலைவர்கள், தொழில்நுட்ப வழங்குநர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் நிபுணர்களை ஒன்றிணைத்து உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம், சேமிப்பு மற்றும் ஸ்மார்ட் நுகர்வு ஆகியவற்றை உள்ளடக்கிய மின்சார அமைப்புகளின் எதிர்காலத்தை வடிவமைக்கும்.

இந்த உச்சி மாநாட்டில் 50-க்கும் மேற்பட்ட கருத்தரங்க அமர்வுகள், 300-க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள், 1,000 பிரதிநிதிகள், 500-க்கும் அதிகமான நிறுவனங்கள் மற்றும் 25,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது உலகளவில் மின்சாரத்தை மையமாகக் கொண்டு நடத்தப்படும் மிகப்பெரிய நிகழ்ச்சி. இவ்வாறு அவர்கள் கூறினர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *