சென்னை:
ரயில் நிலைய குடிநீரில் பாக்டீரியா தொற்று என சிஏஜிஅறிக்கையில் வெளிவந்ததையடுத்து, நாடு முழுவதும் 20 ஆயிரம் இடங்களில் குடிநீர் வசதி மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு குளிரூட்டிகளில் வழங்கப்படும் இலவச குடிநீரை பரிசோதனை செய்ததில், ‘ஈ – கோலி’ பாக்டீரியா இருப்பது சிஏஜிஎனப்படும் இந்திய தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம் ஆய்வில் தெரியவந்தது.
இதையடுத்து, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே வாரியத் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மற்றும் உயர் அதிகாரிகளுடன் இணைந்து கடந்த 16-ம் தேதி ஆலோசனை நடத்தினார்.
அதன்படி, முதல்கட்டமாக, ரயில்வே முழுவதும் உள்ள வாட்டர் கூலர்கள் உட்பட 20 ஆயிரம் இடங்களில் புதிய ‘டேங்க் டு டாப்’ குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்புகள் நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே பயனாளர் ஆலோசனை குழு உறுப்பினர் ஜாபர் அலி கூறியதாவது:
நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் குடிநீரின் தரத்தை உடனடியாக மேம்படுத்த மத்திய ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
குடிநீர் விநியோகத்தில் உடனடியாகச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் உத்தரவிடப்பட்டுள்ளது.
தேவைப்படும் இடங்களில் பழைய நீர் தேக்கத் தொட்டிகளை அகற்றிவிட்டு, புதிய தொட்டிகளை அமைக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.
குடிநீர் ஆதாரங்கள் மற்றும் விநியோக மையங்கள் ஆகிய இரண்டிலும் வழக்கமான நீர் தரப் பரிசோதனைகளை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கண்காணிப்பு, தொட்டிகளை சுத்தம் செய்தல் மற்றும் குடிநீர் தர அறிக்கைகளை வெளியிட்டு வெளிப்படைத்தன்மையைப் பேணவும் ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
முதல்கட்டமாக, 20 ஆயிரம் இடங்களில் குடிநீர் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
பின்னர், படிப்படியாக பல்வேறு இடங்களுக்கும் விரிவுப்படுத்தப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.