சகோதரரை தாக்கியது தொடர்பாக தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கு விசாரணை ஆகஸ்ட் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தது புதுச்சேரி நீதிமன்றம்!!

புதுச்சேரி:
சகோதரரை தாக்கியது தொடர்பாக தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கு விசாரணையை புதுச்சேரி நீதிமன்றம் ஆகஸ்ட் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன். கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி புதுச்சேரி, எழில் நகரில் வசித்துவரும் அவரது சகோதரர் மரிய குளோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மரிய குளோத், அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்கியதாக லாஸ்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் பெற ஆஜராக உத்தரவிட்ட போதும், மரிய வில்சன் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், நீதிமன்றத்தில் வெள்ளியன்று ஆஜராவதில் இருந்து விலக்களிக்க மரிய வில்சன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்த போது, குடும்பப் பிரச்சினை தொடர்பாக சமரசம் செய்ய தயாராக இருப்பதாக அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்று உயர் நீதிமன்றத்தில் உள்ள சமரச தீர்வு மையத்துக்கு வழக்கை அனுப்பிவைத்தது.

இந்த நிலையில் புதுச்சேரி ஜே.எம்.1 நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை ஆகஸ்ட் 18-க்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

அமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கு இன்று ஜேஎம் 1 நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சேரலாதன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமைச்சர் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி “சென்னை உயர் நீதிமன்றத்தில் சமரச தீர்வு மையத்தில் நாளை விசாரணைக்கு வழக்கு வருவதால் அவர் இன்று வர இயலவில்லை” என்று குறிப்பிட்டார்.

இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 21ம் தேதிக்கு ஒத்திவைத்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *