மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்டது – நமது கலாச்சாரம், பண்பாட்டின் அடையாளம் முருகப்பெருமான் – ஆளுநர் ரவி!!

மதுரை:
“மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்டது. நமது கலாச்சாரம், பண்பாட்டின் அடையாளம் முருகப்பெருமான்” என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே உள்ள மைதானத்தில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நாளை (ஜூன் 22) நடைபெறுகிறது. அதனையொட்டி மாநாட்டு வளாகத்தில் அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்கோயில்களில் முருகனின் அறுபடை வீடுகளில் பூஜை செய்யப்பட்ட வேல்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. தினமும் காலை, மாலையில் பூஜைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகைதந்து தரிசனம் செய்கின்றனர்.

அதனையொட்டி மாதிரி அறுபடை வீடுகளில் தரிசனம் செய்ய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம் செய்ய இன்று காலை 10.40 மணியளவில் மாநாட்டு வளாகத்திற்கு வருகை தந்தார்.

அப்போது அவருக்கு இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். பின்னர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மாதிரி கோயிலில் வழிபட்டார்.

அப்போது தீபாராதனை காண்பித்து வழிபாடு செய்தார். அறுபடை வீடுகளுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் வெளியில் வந்த கூடியிருந்த பக்தர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அறுபடை வீடு முன்பு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முருகன் நமக்கு முக்கியமான கடவுள், நமது அடையாளமாகத் திகழ்கிறார். சிவபெருமான் இந்தியா முழுமைக்குமான கடவுளாவார்.

உலகம் முழுவதுமுள்ள இந்துக்களின் தெய்வமாகத் திகழ்கிறார். அவரை தென்னாட்டுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று அழைப்போம். எல்லாமுமான சிவனின் குழந்தை முருகப்பெருமான்.

அவர் நமது பண்பாட்டின், கலாச்சாரத்தின் அடையாளம். நான் அனைத்து அறுபடை வீடுகளுக்கும் சென்றுள்ளேன்.

ஆனால் இங்கு அறுபடை வீடுகளையும் ஒரே இடத்தில் தரிசனம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்டது. இதனை ஒருங்கிணைத்த இந்து முன்னணிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவில் இமயமலை அடிவாரத்திலுள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரே இடத்தில் நான்கு புனித யாத்திரை தலங்கள் உள்ளன.

அதுபோல் முருகப்பெருமானுக்கு அறுபடை வீடுகளில் ஒரே இடத்தில் தரிசனம் செய்யும் வகையில் அமைத்துள்ளதன் மூலம் பக்தர்களின் கனவு நிறைவேறியுள்ளது.” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *