தமிழகத்தில் தொடரும் குதிரை பேரத்தை தடுக்க வேண்டும்!! டிடிவி தினகரன் ஆளுநரிடம் மனு….!!

சென்னை:
தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகரை, சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று சந்தித்து மனு அளித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்காக மே 8-ம் தேதி இரவு,குதிரை பேரத்தை தவெக தொடங்கியது. அப்போதே ஆளுநரைச் சந்தித்து புகார் அளித்தேன்.

இந்நிலையில், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன், நேற்று சட்டப்பேரவையில், அதிமுக எம்எல்ஏக்கள் 10 பேர் தவெகவில் இணைய இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் தவெக அரசின் குதிரை பேரம் தொடர்வது உறுதியாகியுள்ளது.

இது தொகுதி மக்களின் தீர்ப்புக்கு எதிரானது. அரசியல் அடிப்படையையும், ஜனநாயகத்தையும் பாதிக்கும்.

தூய சக்தி என்று சொல்லி நம்மை ஏமாற்றிக் கொண்டிருப்பவர்களின் முகமூடியை கிழித்து, உண்மை முகத்தை மக்களுக்கு காட்ட வேண்டும்.

மன்னார்குடி எம்எல்ஏ மீது 10-வது அட்டவணையின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட தகுதி நீக்க மனுவின் மீது சட்டப்பேர வைத் தலைவர் நடவடிக்கை எடுக்கத் தவறியது, மே 8-ம் தேதி குதிரை பேரம் தொடர்பாக சென்னை கிண்டி காவல் நிலையத்தில் அளித்த புகார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளத் தவறியது ஆகியவற்றில், ஆளுநர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் தொடரும் குதிரை பேரத்தை தடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். ஆளுநருடனான சந்திப்பின்போது, கட்சியின் துணை பொதுச் செயலாளர் செந்தமிழன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *