சென்னை:
“சட்டப்பேரவையில் சோழவந்தான் எம்எல்ஏ ஜல்லிக்கட்டு குறித்த சர்ச்சை பேச்சுக்கு பதிலளிக்காமல் மவுனம் காப்பதன் மூலம், முதல்வருக்கு இதில் உடன்பாடு உள்ளதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது,” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு போட்டி இளைஞர் களைச் சீரழிக்கிறது எனப் பேசிய சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா மற்றும் தவெக அரசைக் கண்டித்து, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், அமைப்புச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமையில், ஜல்லிக்கட்டு காளைகளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “தமிழர்களுடைய பாரம்பரியம், கலாச்சாரம், நாகரிகம், வீரம் உள்ளிட்டவற்றின் அடையா ளமான ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு போட்டியை இளைஞர் களை சீரழிக்கிறது என்று வாய்க்கூசாமல், தைரியமாக சட்டமன்றத்திலே பேசிய சோழவந்தான் தொகுதி எம்எல்ஏவை முதல்வர் கண்டிக்க வேண்டும்.
அவரை ராஜினாமா செய்ய வைக்காவிட்டால் முதல்வரே பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்.
இந்த சர்ச்சை கருத்துக்கு முதல்வர் மவுனம் காப்பதன் மூலம், அவருக்கும் இதில் உடன்பாடு உள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது.
மக்கள் பிரச்சினைகள் எதற்கும் முதல்வர் வாய் திறக்காமல் உள்ளார். ஏனென்றால் அவரால், ஸ்கிரிப்ட் இல்லாமல் பேச முடியாது.
இந்த ஜல்லிக்கட்டு உரிமை என்பது ஒட்டுமொத்த தமிழினத்தி னுடைய பிறப்புரிமை. இதைப் பறிக்க நினைத்தால், பெரிய அதிர்ச்சியை அரசு சந்திக்க வேண்டியிருக்கும்.
தற்போது முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா தனது ராஜினாமாவை வாபஸ் பெறுகிறேன் எனக் கூறுவது, அரசின் சாயம் வெளுத்துள்ளதை காட்டுகிறது,” எனப் பேசினார்.
பின்னர் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு, “எப்போது ஆட்சி மாற்றம் வந்ததோ, அப்போதிருந்தே வெயிலும், இயற்கையே மக்களை வாட்டி வதைக்கிறது.
இந்த ஆட்சியானது, ‘படையப்பா’ படத்தில் வரும், ‘மாப்பிள்ளை அவர்தான் அவர் போட்டிருக்கிற சட்டை எங்களது’ என்ற வசனம் போல், ‘ஆட்சி அவர்களுடையது, அவர்கள் கொண்டுவந்துள்ள திட்டம் எல்லாம், அதிமுகவுடையது’.
புதிதாக திட்டம் எதுவும் போடவில்லை. காங்கிரஸ் காலத்திலே ஜல்லிக்கட்டுக்கு தடையை கொண்டுவர முயன்றனர். ஆனால், ஜெயலலிதா அதைத் தடுத்து நிறுத்தினார்.
அதன் பின்னர், இந்த போட்டிக்கான தடையை எதிர்த்து இளைஞர்கள் திரண்டு அதை முறியடித்தனர்.
தொடர்ந்து அதிமுக ஆட்சியில் அந்த தடை நீக்கப்பட்டு தற்போது இப்போட்டி நடைபெற்று வருகிறது.
இப்போது, இந்தப் போட்டியைப் பற்றி இழிவாகப் பேசி சட்டப்பேரவை உறுப்பினரை முதல்வர் கண்டிக்க வேண்டும். ஆனால் எதுவும் செய்யவில்லை.
இந்த ஆட்சி ரீல்ஸ் போடுவதையே பெருமை என நினைத்துக் கொண்டிருக்கிறது. ரியல் ஆட்சிக்கு வர மறுக்கின்றனர்” என்றார்.
தொடர்ந்து பேசிய அமைப்புச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா, “தமிழகத்திலேயே மொழிப் போராட்டம், ஜல்லிக்கட்டுப் போராட்டம் ஆகிய இரண்டு போராட்டங்கள் தான் பெரிய போராட்டமாக வெற்றி பெற்றன.
ஐல்லிக்கட்டு, இளைஞர்களின் வீர விளையாட்டாக பார்க்கப் படுகிறது. இதை அவமதிக்கும் வகையில் இந்தத் தொகுதி எம்எல்ஏ பேசியிருப்பது, சட்டப்பேரவை மாண்பை கேள்விக் குறியாக்கும் செயல். இதை ரீல்ஸ் முதல்வர் கண்டிக்க தவறியுள்ளார்.
போராட்டம் எழுந்த பின்னரே அந்தப் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து பேரவைத் தலைவர் நீக்கியுள்ளார். இந்தச் சூழலில் இந்த ஆட்சி இளைஞர்களுக்கான ஆட்சியாக இல்லை.
இந்த ரீல்ஸ் ஆட்சி அகற்றப்பட வேண்டிய நிலையை இன்றைக்குத் தமிழகம் எதிர்நோக்கியிருக்கிறது. அதற்கான முதல் போராட்டமாக இந்தப் போராட்டம் அமைகிறது” என்றார்.