சென்னை,
திராவிட மாடல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்ததாக ஒப்புக்கொண்ட தவெக அரசுக்கு நன்றி என்று எதிர்க்கட்சித் தலைவர்உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் கடந்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 6-ந் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன.
தொடர்ந்து, ஆகஸ்டு 7, 10,11 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதமும், 12-ந் தேதி நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோரின் பதில் உரையும் இடம் பெற்றது.
இந்த நிலையில், ஆகஸ்டு 17-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது.
இதுவரை, 43 துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து முடிந்துள்ளது.
இந்த நிலையில், முதல்-அமைச்சர் கையில் உள்ள முக்கிய துறையான காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
காலை 9.30 மணிக்கு தமிழக சட்டசபை கூடியதும், முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. கேள்வி நேரம் முடிந்ததும், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் தொடங்கியது.
இந்த விவாதத்தில், எதிர்க்கட்சி தலைவர்உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
திமுக ஆட்சியில் டாப் கியரில் சென்ற தமிழ்நாடு, தவெக ஆட்சியின் 116 நாட்களில் ரிவர்ஸ் கியரில் சென்று கொண்டு இருக்கிறது.
எங்கள் ஆட்சியில் குற்றங்கள் குறைந்திருப்பதாக தற்போது வழங்கப்பட்டுள்ள கொள்கை விளக்க குறிப்பில் பக்கம் 293, 295, 296-தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாதியபாகுபாடு கொலைகள் குறைந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறீர்கள்.
எனவே, எங்கள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருந்ததாக ஒப்புக்கொண்டதற்கு நன்றி
116 நாள் ஆட்சியில், பெண்களுக்கு பெரிய தொல்லையாக உள்ளது. கறிக்கடையில் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் தினமும் வெட்டு குத்து நடக்கிறது.
ஆட்சிக்கு வந்த பின் 10 ஆணவக்கொலை நடந்துள்ளது. அதற்கும் பெயர் மாற்றிவிட்டனர்.
116 நாட்களில் 8 சிறை மரணங்கள்; நீதியும் கிடைக்கவில்லை, குறைந்தபட்சம் Sorryயும் கிடைக்கவில்லை. கடந்த 116 நாட்க ளில் 200 கொலைகள், 500 பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளன.
த.வெ.க. ஆட்சியில் சட்டம் இருக்கு ஒழுங்கு இல்லை; கடந்த காலத்தில் குற்ற நிகழ்வுகளுக்கு அரசு காரணம் என கூறிய கட்சி, ஆட்சிக்கு வந்த பிறகு தனி நபர்கள்தான் காரணம் என மக்களுக்கு பாடமெடுக்கின்றனர்.
இவர்களை வெளிப்படையாக விமர்சனம் செய்யும் பாஜகவினர் கைதாகவில்லை, ஏன் அவர்கள் மீது புகார் கூட கொடுப்பதில்லை.
எங்களுக்கு வந்தால் ரத்தம், அவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா. பாஜக அடித்தாலும், வலித்தாலும் வெளியில் சொல்ல கூடாது என்கிற ஆளுங்கட்சியின் இந்த அரசியல் வியூகத்தை இதுவரை நாங்கள் கேட்டதும் இல்லை, பார்த்ததும் இல்லை.
பல்வேறு வாக்குறுதிகளை அளித்தீர்கள், நிறைவேற்றவில்லை. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் என்று சொன்னீர்கள். இந்த அரசின் திட்டங்களை தாய்மாமன் காதுகுத்தும் திட்டம் என்று சொல்லிவிடலாம்.
திட்டங்கள் மக்களை ரீச் ஆவதைவிட, போடும் ரீல்ஸ் ரீச் ஆனால் போதும் என நினைக்கிறார்கள்.
மக்கள் எங்களுக்கு கேள்வி கேட்கும் பொறுப்பை வழங்கி இருக்கிறார்கள்.
சரியான கேள்வியைக் கேட்டு உங்களிடம் பதில் வாங்க வேண்டிய இடத்தில் நாங்கள் இருக்கிறோம்.
எனவே, லாஜிக்கே இல்லாத குட்டி கதைகள் சொல்லாமல் முதலமைச்சர் நேரடியாகப் பதிலைச் சொல்ல வேண்டும்.
ரீல்ஸ் கண்டெண்டுக்காக இல்லாமல்; ரோல் கேமரா ஆக்ஷன் இல்லாமல் டேக் டைவர்ஷன் இல்லாமல்
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் நிறுத்தப்பட்டத்தை உதயநிதி ஸ்டாலின் பட்டியலிட்டார்.