சென்னை:
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் 3 நாட்களுக்கு கட்சி யின் தலைமையகத்தில் விருப்ப மனுக்களைப் பெறலாம் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவைகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 6-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று (திங்கள்கிழமை) அறிவித்தது.
இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் 6.10.2026 அன்று நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புவோர், தலைமைக் கழகத்தில் இன்று (8.9.2026) முதல் 10.9.2026 வியாழக் கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரையிலும் அதற்கான படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, 10.9.2026 மாலை 6 மணிக்குள் தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் முதல்வர் விஜய் வெற்றி பெற்றார்.
முதல்வராகப் பதவி ஏற்ற பிறகு, திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
பின்னர், சி.விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்தியபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகிய 6 அதிமுக எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
இதில், திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர், பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு அக்.6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் 69,298 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
தவெக வேட்பாளர் எழில் கேத்ரின் 62,090, திமுக வேட்பாளர் அமுலு பொன்மலர் 59,838, நாதக வேட்பாளர் ஜானகிராமன் 4,950 வாக்குகளை பெற்றனர்.
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த மரகதம் குமரவேலுக்கு மாநில துணை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், அத்தொகுதியில் மரகதம் குமரவேல் போட்டியிடுவாரா, ஏற்கெனவே போட்டியிட்ட எழில் கேத்ரினுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தாராபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சத்தியபாமா 81,100 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
திமுக வேட்பாளர் இந்திராணி 64,373, கவுரி சித்ரா 46,438, நாதக வேட்பாளர் திவ்யா 6,026 வாக்குகளைப் பெற்றனர். எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த சத்தியபாமா, திருப்பூர் கிழக்கு மாவட்ட இணைச் செயலாளராக உள்ளார். தாராபுரம் தொகுதியில் சத்தியபாமாவை வேட்பாளராக அறிவிக்க அதிகம் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக அலையை மீறி மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது.
அதனால், அந்த 2 தொகுதிகளில் மீண்டும் வெற்றி பெறும் முனைப்பில் அதிமுக உள்ளது. திமுகவும் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (செப்.9) தொடங்குகிறது.
செப்.16-ம் தேதி மனுதாக்கல் செய்ய கடைசி நாள். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 17-ம் தேதி நடைபெறுகிறது.
மனுக்களை திரும்பப் பெற 19-ம் தேதி கடைசி நாள். அக்.6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அக்.9-ம் தேதி நடக்கிறது.
அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.