சென்னை:
துலீப் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் கிழக்கு மண்டலம் – தென் மண்டலம் அணிகள் விளையாடி வருகின்றன.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த கிழக்கு மண்டலம் அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 79 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 385 ரன்கள் குவித்தது.
கேப்டன் இஷான் கிஷன் 111, குமார் குஷாக்ரா 63 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இஷான் கிஷனும், குமார் குஷாக்ராவும் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர்.
குமார் குஷாக்ரா 128 பந்துகளில், 8 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் சதம் விளாசினார். முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இது அவரது 6-வது சதமாக அமைந்தது.
சதம் விளாசிய சிறிது நேரத்திலேயே குமார் குஷாக்ரா, திரிபுரண விஜய் பந்தில் ஆட்டமிழந்தார். குமார் குஷாக்ரா 132 பந்துகளை எதிர்கொண்டு 101 ரன்கள் சேர்த்தார். 5-வது விக்கெட்டுக்கு குமார் குஷாக்ரா, இஷான் கிஷன் ஜோடி 290 பந்துகளில் 230 ரன்கள் குவித்தது. இதையடுத்து அனுகுல் ராய் களமிறங்கினார்.
அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 270 பந்துகளில், 26 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் இரட்டை சதம் விளாசினார்.
முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இஷான் கிஷன் இரட்டை சதம் அடிப்பது இது 2-வது முறையாகும்.
அனுகுல் ராய் 45, முகமது ஷமி 28, முகமது கவுனைன் குரேஷி 40 ரன்களில் நடையை கட்டினர்.
மட்டையை சுழற்றிய இஷான் கிஷன் 334 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 30 பவுண்டரிகளுடன் 270 ரன்கள் விளாசிய நிலையில் திரிபுரண விஜய் பந்தில் ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் 522 நிமிடங்கள் களத்தில் செலவிட்டார்.
கடைசி விக்கெட்டாக முகேஷ் குமார் (0) நடையை கட்டினார். முடிவில் கிழக்கு மண்டலம் அணி 163 ஓவர்களில் 708 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
தென் மண்டலம் அணி சார்பில் திரிபுரண விஜய் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
ஸ்ரேயஸ் கோபால், ஷாமா மிலிந்த் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். 3-வது நாளான இன்று தென் மண்டலம் அணி தனது பேட்டிங்கை தொடங்குகிறது.
முச்சதம் வாய்ப்பு நழுவியது
துலீப் டிராபி வரலாற்றில் முச்சதம் அடித்த ராமன் லம்பா (1987-ம் ஆண்டு), ககன் கோடா (2001-ம் ஆண்டு) ஆகியோரின் சாதனை பட்டியலில் இடம் பெறும் வாய்ப்பை இஷான் கிஷன் தவறவிட்டார்.
தென் மண்டலம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இஷான் கிஷன் 270 ரன்கள் விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார்.
சுழலுக்கு எதிராக ரன் வேட்டை
இடதுகை வேகப்பந்து வீச்சாளர் சி.வி. மிலிந்த் வீசிய பந்து இஷான் கிஷனின் வயிற்றுப் பகுதியில் தாக்கியது. இதனால் மருத்துவ உதவிக்காக ரிட்டயர்டு முறையில் இஷான் கிஷன் வெளியேறினார். இதன் பின்னர் அனுகுல் ராய் ஆட்டமிழந்ததும் மீண்டும் களமிறங்கி மட்டையை சுழற்றினார் இஷான் கிஷன்.
முக்கியமாக சுழற்பந்து வீச்சுக்கு எதிராக தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டார். ஸ்ரேயஸ் கோபால் வீசிய 100 பந்துகளில் 94 ரன்களையும், திரிபுரண விஜய் வீசிய 88 பந்துகளில் 70 ரன்களையும் விளாசி அசத்தினார் இஷான் கிஷன்.
‘தாக்கம் இல்லை’
தென் மண்டல அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் 2 நாட்களிலும் தனது பந்துவீச்சில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. 25 ஓவர்களை வீசிய அவர், 3 மெய்டன்களுடன் 140 ரன்களை தாரை வார்த்தார்.
கவனம் ஈர்த்த இஷான்
சென்னையில் நடைபெற்று வரும் துலீப் டிராபி இறுதிப் போட்டியை தேர்வுக்குழு உறுப்பினர்கள் 3 பேர் நேரில் பார்வையிட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இஷான் கிஷனின் மட்டை வீச்சு கவனம் பெற்றுள்ளது.