20-வது ஆசிய விளையாட்டு போட்டி நாளை முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 4-ந் தேதி வரை ஜப்பானின் அய்ச்சி, நகோயா நகரங்களில் நடக்கிறது.
இந்த போட்டியின் அதிகாரபூர்வ தொடக்க விழா (நாளை) நடக்கும் முன்பே கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து உள்ளிட்ட சில போட்டிகள் தொடங்கி நடந்து வருகின்றன.
இதில் பெண்கள் கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் நேரடியாக கால் இறுதியில் கால் பதித்தன.
ஆல்-ரவுண்டராக ஜொலித்த பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா. இதன் முதலாவது கால் இறுதி ஆட்டத்தில் நிகார் சுல்தானா தலைமையிலான வங்காளதேச அணி, சீனாவை சந்திக்க இருந்தது.
ஆனால் ஆட்டம் தொடங்கும் முன்பே மழை பலமாக கொட்டியது. இதனால் ‘டாஸ்’ போடப்படாமலேயே இந்த ஆட்டம் கைவிடப்பட்டது.
இருப்பினும் தரவரிசை முன்னிலை அடிப்படையில் வங்காளதேச அணி (10-வது இடம்) வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அரை இறுதிக்கு முன்னேறியது.
தரவரிசையில் 36-வது இடத்தில் இருக்கும் சீனா களம் இறங்காமலேயே நடையை கட்டியது.
வங்காளதேச அணி, அரை இறுதியில் இந்தியா-ஜப்பான் இடையிலான ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியை எதிர்கொள்ளும்.
மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, தாய்லாந்தை சந்தித்தது. ‘டாஸ்’ ஜெயித்த பாகிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
மழை பாதிப்பால் தாமதமாக தொடங்கியதால் போட்டி 11 ஓவர்கள் கொண்டதாக குறைக்கப்பட்டது.
முதலில் ஆடிய தாய்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 11 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 91 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக நன்னாபத் கொஞ்சரோயென்காய் 49 ரன்கள் சேர்த்தார். பாகிஸ்தான் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பாத்திமா சனா 2 விக்கெட் வீழ்த்தினார்.
தொடர்ந்து ஆடிய பாகிஸ்தானும் தட்டுத்தடுமாறியே வெற்றி பெற்றது. அந்த அணி 10.4 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 92 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது.
ஷவால் ஜுல்பிகர் 25 ரன்னும், கேப்டன் பாத்திமா சனா 21 ரன்னும் எடுத்து வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்.
இன்று நடைபெறும் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, போட்டியை நடத்தும் ஜப்பானு டன் (காலை 10.30 மணி) மல்லுக்கட்டுகிறது.
கடந்த வாரம் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற கையோடு களம் காணும் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக இருக்கிறது.
பேட்டிங்கில் ஷபாலி வர்மா, ஸ்மிர்தி மந்தனாவும், பந்து வீச்சில் ஸ்ரீசரனி, தீப்தி ஷர்மா, நந்தினி ஷர்மாவும் நல்ல நிலையில் உள்ளனர்.
ஜப்பான் அணிக்கு உள்ளூர் சூழல் ஓரளவு அனுகூலமாக இருந்தாலும், பலம் வாய்ந்த இந்தியாவின் சவாலை சமாளிப்பது கடினம் தான்.
முன்னதாக நடக்கும் மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை-நூர் அரின்னா நாட்சயா தலைமையிலான மலேசியா அணிகள் (அதிகாலை 5.30 மணி) மோதுகின்றன.