”குஜராத்- ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை”!!

மும்பை
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

மொத்தமுள்ள 70 லீக்கில் இதுவரை 50 ஆட்டங்கள் முடிந்து விட்டன. ஆனால் எந்த அணியும் அடுத்த சுற்று வாய்ப்பை (பிளே-ஆப்) இன்னும் உறுதி செய்யவில்லை.

ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் ஆடுகின்றன. இதில் அதிகாரபூர்வமாக ‘பிளே-ஆப்’ சுற்றை எட்டுவதற்கு 9 வெற்றிகள் தேவை. குறைந்தது 8 வெற்றியாவது பெற வேண்டும்.

தற்போது லீக் சுற்று விறுவிறுப்பான கட்டத்தை நெருங்குவதால், இனி ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவும் முக்கியத்துவம் பெறும்.

இந்த நிலையில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்றிரவு அரங்கேறும் 51-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான குஜராத் டைட்டன்சும், ஐதராபாத் சன்ரைசர்சும் மல்லுகட்டுகின்றன.


9 ஆட்டங்களில் ஆடியுள்ள குஜராத் அணி 6 வெற்றி, 3 தோல்வி என 12 புள்ளிகளுடன் பட்டியலில் டாப்-4 இடத்திற்குள் உள்ளது.

ராஜஸ்தானுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 209 ரன்கள் குவித்தும், சூர்யவன்ஷியின் 35 பந்து சதத்தால் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தது.

ஆனாலும் குஜராத்தை பொறுத்தவரை பேட்டிங்கில் மிக வலுவாக காணப்படுகிறது. கேப்டன் சுப்மன் கில் (4 அரைசதத்துடன் 389 ரன்), சாய் சுதர்சன் (5 அரைசதம் உள்பட 456 ரன்), ஜோஸ் பட்லர் (406 ரன்) அந்த அணியின் பேட்டிங் தூண்களாக உள்ளனர்.

கடந்த ஆட்டத்தில் முதுகுவலியால் பீல்டிங் செய்ய வராத சுப்மன் கில், இன்றைய ஆட்டத்தில் களம் திரும்புவதில் சிக்கல் இருக்காது என்று தெரிகிறது.

பந்து வீச்சில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ரஷித்கான் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத் அணி 3 வெற்றி, 6 தோல்வியை சந்தித்துள்ளது. எஞ்சிய 5 ஆட்டத்திலும் வென்றால் தான் பிளே-ஆப் சுற்று வாய்ப்பை பற்றி நினைத்து பார்க்க முடியும். ஒன்றில் தோற்றாலும் சிக்கல் தான்.

தனது கடைசி லீக்கில் சென்னை சூப்பர் கிங்சை 154 ரன்னில் மடக்கிய ஐதராபாத் அணி அந்த இலக்கை 18.4 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. ஹர்ஷல் பட்டேலின் 4 விக்கெட்டும், இஷான் கிஷனின் அதிரடியும் (44 ரன்) வெற்றிக்கு உதவின.

இதனால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் காணுவார்கள். ஐதராபாத் அணியில் அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், கிளாசென், இஷான் கிஷன் ஆகிய சூறாவளி பேட்ஸ்மேன்கள் ஒருசேர மிரட்டினால் எழுச்சி பெறலாம்.

பந்து வீச்சில் கேப்டன் கம்மின்ஸ் முழுமையாக கைகொடுக்க வேண்டியது அவசியம். 4 ஆட்டங்களில் அவருக்கு விக்கெட்டே கிடைக்கவில்லை.

இதே போல் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் பந்து வீச்சும் (8 ஆட்டத்தில் 6 விக்கெட்) எடுபடவில்லை.

இவ்விரு அணிகளும் ஏற்கனவே ஐதராபாத்தில் சந்தித்த லீக்கில் குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை பதம் பார்த்தது.

அதற்கு அவர்களது இடத்தில் வட்டியும், முதலுமாக பதிலடி கொடுக்க ஐதராபாத் வீரர்கள் தீவிரம் காட்டுவதால் களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.

மொத்தத்தில் இவ்விரு அணிகளும் 5 முறை நேருக்கு மோதி இருக்கின்றன. இதில் 4-ல் குஜராத்தும், ஒன்றில் ஐதராபாத்தும் வெற்றி கண்டுள்ளன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

குஜராத்: சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், வாஷிங்டன் சுந்தர், ஷாருக்கான், ராகுல் திவேதியா, கரிம் ஜனத் அல்லது ரூதர்போர்டு, ரஷித் கான், சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் ஷர்மா அல்லது அர்ஷத் கான்.

ஐதராபாத்: அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசென், அனிகெட் வர்மா, காமிந்து மென்டிஸ் அல்லது வியான் முல்டெர், நிதிஷ்குமார் ரெட்டி, கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷல் பட்டேல், ஜெய்தேவ் உனட்கட், முகமது ஷமி, ஜீசன் அன்சாரி.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *