ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல்நிலையத்தில், ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களை ஆய்வு செய்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர், பலர் 32 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கடந்த 10-ம் தேதி டெல்லியில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் ஏராளமான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.
அந்த வெடிபொருட்கள் ஆய்வுக்காக ஜம்மு காஷ்மீர் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவை வெடித்துள்ளன.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோ் காவலர்கள் மற்றும் தடயவியல் அதிகாரிகள் என்றும் இருவர் ஸ்ரீநகர் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் ராணுவ மருத்துவமனை மற்றும் ஷெர் இ காஷ்மீர் மெடிக்கல் சயின்ஸஸ் ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து தெரிவித்துள்ள ஜம்மு காஷ்மீர் டிஜிபி நளின் பிரபாத், மாநில புலனாய்வு நிறுவன அதிகாரி ஒருவர், மூன்று தடயவியல் ஆய்வக அதிகாரிகள், இரண்டு குற்றப்பிரிவு அதிகாரிகள், இரண்டு வருவாய் அதிகாரிகள் மற்றம் இந்த குழுவுடன் தொடர்புடைய ஒரு தையல்காரர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
27 காவல்துறை அதிகாரிகள், இரண்டு வருவாய் அதிகாரிகள், பொதுமக்களில் மூவர் ஆகியோர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெடிகுண்டுகள் அவற்றின் உணர்திறனை கருத்தில் கொண்டு மிகுந்த எச்சரிக்கையுடன் கையாளப்பட்டதாகவும் எனினும், வெள்ளிக்கிழமை இரவு 11.20 மணி அளவில் தற்செயலாக இந்த வெடிப்பு நிகழ்ந்ததாகவும், இந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து வேறு எந்த ஊகங்களும் தேவையற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.