மதுராந்தகம்:
ரெட்டைமலை சீனிவாசன் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, மதுராந்தகம் தொகுதியின் இடைத்தேர்தல் ஜனநாயகப் படுகொலை என்று கூறினார்.
ரெட்டைமலை சீனிவாசன் நினைவு நாளை ஒட்டி, செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் பகுதியில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் தா.மோ.அன்பரசன், க.சுந்தர் ஆகியோர் முன்னிலையில், மதுராந்தகம் திமுக வேட்பாளர் பரந்தாமன் ரெட்டைமலை சீனிவாசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மரகதம் குமரவேலுக்கு எதிராக வாக்களித்த கட்சியில் சேர்ந்து, வாக்களித்த மக்களுக்கு எதிராகவே தற்போது தேர்தலில் போட்டியிடுகிறார்.
மதுராந்தகம் இடைத்தேர்தல் என்பது ஜனநாயகப் படுகொலை. திமுக வேட்பாளருக்கு கிராமங்கள்தோறும் படித்த இளைஞர்கள் ஆதரவாக இருப்பதை நாம் பார்க்கிறோம்.
தவெக வேட்பாளர் செல்லும் இடமெல்லாம் மக்கள் விரட்டி அடிப்பதையும் பார்த்து வருகிறோம்.
இதனால் தவெக வேட்பாளர் போலீஸ் பாதுகாப்போடு பிரச்சாரத்துக்கு செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.