சென்னை ;
அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக பதவியேற்ற பின்னர், அக்கட்சி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவதாக திமுகவினரும், எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ளவர்களும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா,
“அதிமுக இன்று தொடர்ந்து சரிவுகளையே சந்தித்து வருகிறது. ஒருசில சுயநலவாதிகள் இந்த இயக்கத்தை இந்த அளவுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். திமுகவில் தான் குடும்ப அரசியல் இருக்கும். ஆனால் அதிமுகவில் சாதாரண தொண்டர் கூட எம்எல்ஏ, எம்பி-ஆக வர முடியும்.
ஆனால் சமீப காலமாக அதிமுக குறிப்பிட்ட ஜாதி அரசியலுக்குள் செல்கிறது. நான் இவ்வாறு ஜாதி பார்த்திருந்தால், பெங்களூரு செல்லும்போது இவருக்கு (எடப்பாடி பழனிசாமி) முதலமைச்சர் பதவியை கொடுத்துவிட்டு போயிருப்பேனா?. அதிமுக முடிந்துவிட்டது என நினைக்க முடியாது. ஏனென்றால் என்னுடைய என்ட்ரி ஆரம்பித்துவிட்டது. என் பின்னால் தொண்டர்கள், தமிழ்நாட்டு மக்கள் உள்ளனர்.
எனவே 2026ல் நிச்சயமாக தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்போம். அதுவும் தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைப்போம். முக்கியமான நேரத்தில் மட்டுமே நான் பேசுவேன். அந்த சமயம் வந்துவிட்டது. எனவே தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம். நிச்சயமாக நானும் சுற்றுப் பயணம் வரப் போகிறேன்.
விரைவில் மக்களை சந்தித்து நான் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் திமுக எனக்கு தெளிவான பதில்களை சொல்ல வேண்டியிருக்கும்” என்றார்.