காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் டில்லி ராணி. டில்லி ராணியின் கணவர் மேகநாதன்.
மேகநாதன் டில்லி ராணி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக அவப்பொழுது பிரிந்து வாழ்வதும் சில மாதங்கள் கழித்து சேர்ந்து வாழ்வதும் என அவர்களுடைய வாழ்க்கை இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் இன்று டில்லி ராணி காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் அருகே உள்ள சாலை தெரு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது இந்தியன் வங்கி அருகே அவரது கணவர் மேகநாதன் வழிமறித்து வாகனத்தை காலால் எட்டி உதைத்து பெண் காவலர் டில்லி ராணியை நிலை தடுமாறி கீழே விழ செய்துள்ளார்.
தொடர்ந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெண் காவலர் டில்லி ராணியை வெட்ட ஓட ஓட துரத்தியுள்ளார். உயிருக்கு பயந்த டில்லி ராணி அங்கிருந்து தப்பி ஓடி எதிரே இருந்த இந்தியன் வங்கி ஏடிஎம்மில் தஞ்சமடைய முயற்சி செய்த பொழுது, இடது கையில் சரமாரியாக டில்லி ராணியை மேகநாதன் வெட்டியுள்ளார்.
அங்கிருந்த பொதுமக்கள் கத்தி கூச்சலிட்டத்தை பார்த்த மேகநாதன் அங்கு இருந்து தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவ காஞ்சி போலீசார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த டில்லி ராணியை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் பெண் காவலர் டில்லி ராணிக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சிவ காஞ்சி போலிசார் தப்பி ஓடிய கணவர் மேகநாதனை தேடி வருகின்றனர். மேலும் சம்பவம் நடைபெற்ற ஏடிஎம் தற்காலிகமாக மூடப்பட்டு காவல்துறை கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.