3 நாட்களில் 20,000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்படும் படகில் பயணித்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவேகானந்தர் நினைவு மண்டபம் தமிழ்நாட்டின் தென்கோடி எல்லையான கன்னியாகுமரியில் இருக்கும் விவேகானந்தர் பாறையின் மேல் அமைந்துள்ளது.
1892ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் தேதி கன்னியாகுமரி வந்த விவேகானந்தர் கடலுக்குள் நீந்திச் சென்று அங்கிருந்த பாறையில் மூன்று நாட்கள் கடும் தவம் இருந்த இடத்தில் இம்மண்டபம் 2 செப்டம்பர் 1970 அன்று அமைக்கப்பட்டது.
கடலின் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறையின் மேல் அமைக்கப்பட்டுள்ள இம்மண்டபத்தினுள் விவேகானந்தரின் முழு உருவ வெண்கலச் சிலையும், விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் பின் பகுதியில் மண்டபத்தின் கீழே ஒரு தியான மண்டபம் ஒன்று அமைக்கப்பட் டிருக்கிறது. இது விவேகானந்த கேந்திரம் எனும் அமைப்பின் பராமரிப்பில் உள்ளது.
இந்நிலையில் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்படும் படகில் ஜூன்-15, 16, 17 ஆகிய 3 நாட்களில் 20,000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பயணித்ததாகத் தமிழ்நாடு பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
பக்ரீத் மற்றும் வார விடுமுறையால் கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்குச் சென்று மகிழ்ந்தனர்.