சென்னை:
அனல் மின் நிலைய ஊழியர்களுக்கு 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் விடுமுறை அளித்து மின் வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் அனல், எரிவாயு சுழலி மின் நிலையங்கள் போன்ற எரிசக்தி ஆதாரங்கள் வாயிலாகவும், சூரிய சக்தி, காற்றாலை போன்ற மரபுசாரா ஆற்றல் வாயிலாகவும் மின் உற்பத்தி செய்து வருகிறது.
இவற்றில் காற்றாலை, சூரியசக்தி ஆகியவை இயற்கை சார்ந்து இருப்பதால் நிலையான உற்பத்தி இருக்காது. ஆனால் அனல் மின் நிலையங்களில் நிலையான மின் உற்பத்தி இருக்கும்.
மின் வாரியத்துக்கு தற்போது வடசென்னை, மேட்டூர், தூத்துக்குடியில் 5,120 மெகாவாட் திறனில் 5 அனல் மின் நிலையங்கள் உள்ளன. அனல் மின் நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, அனைத்து சனிக்கிழமையும் வேலை நாளாக உள்ளது.
ஆனால் வாரிய அலுவலகங்கள், மின் கட்டண மையங்களுக்கு, 2-வது சனிக்கிழமை விடுமுறையாகவும், மற்ற சனிக்கிழமை வேலை நாளாகவும் இருந்தது. கடந்த, 2018 மார்ச் முதல் 4-வது சனிக்கிழமையும் விடுமுறை விடப்படுகிறது.
இந்நிலையில் அனல் மின் நிலையங்களில் வழக்கமான பணிகளில் உள்ளவர்களுக்கு 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் விடுமுறை வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தன.
இந்த கோரிக்கையை பரிசீலித்த மின் வாரியம் அனல் மின் நிலையங்களின் ஊழியர்களுக்கும் இனி 2-வது, 4-வது சனிக்கிழமை விடுமுறை எனவும், காலை 8:30 மணிமுதல் மாலை 5:30 வரை இருந்த பணி நேரத்தை, மாலை 5:45 மணி வரை நீட்டிப்பதாகவும் அறிவித்துள்ளது.
மேலும் குறைந்த அளவில் பணியாளர்கள் பராமரிப்புப் பணிகளில் சுழற்சி முறையில் ஈடுபடலாம். அன்று பணிக்கு வருவோருக்கு மாற்று விடுப்பு மட்டுமே வழங்கப்படும் என்றும் கூடுதல் சம்பளம் வழங்கப்படாது எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.