கோவை
அதிமுக-வில் இருந்து செங்கோட்டையன் விலகியது பாஜக-வின் சித்து விளையாட்டு என திருமாவளவன் கூறியுள்ளது, தேசிய ஜனநாயக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே என, வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
பாஜக சார்பில் கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி நேற்று நடந்தது. பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் பாஜக மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவுத் துறை தலைவர் நயினார் பாலாஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அனைத்து மாவட்டங்களிலும் தரமான விளையாட்டு மைதானங்கள் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவையில் பாரா ஒலிம்பிக் வீரர்களின் பயிற்சிக்காக எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 2 கோடி நான் ஒதுக்கீடு செய்த போதும் தமிழக அரசு அதற்கான நிலத்தை வழங்கவில்லை.
மழையால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதில் தமிழக அரசு மெத்தனமாக உள்ளது. இதனால் பயிர் காப்பீடு செய்த போதும் முழுமையான பலனை விவசாயிகள் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் விரைவில் இழப்பீடு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிமுக-வில் இருந்து செங்கோட்டையன் விலகியது பாஜக-வின் சித்து விளையாட்டு என திருமாவளவன் கூறியுள்ளது, தேசிய ஜனநாயக கூட்டணியில் குழப்பம் விளைவிக்க வேண்டும் என்பதற்கும் பலவீனமடைந்தவர்கள் என மக்கள் மத்தியில் காட்டுவதற்காகவும் அவர் மேற்கொள்ளும் முயற்சி.
இது அவருக்கு, விசிகவுக்கு வழங்கப்பட்ட அசைன்மென்ட். 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தான்தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்.
மக்களிடம் எங்கள் கூட்டணிக்கு அதிக வாக்குகளை பெறுவது தான் எங்களுடைய அசைன்மென்ட்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.