புதுடெல்லி:
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியுள்ள நிலையில் பிரதமர் மோடி எதிர்க்கட்சிகள் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், வழக்கத்தைவிட சற்று காட்டமாக, நாடாளுமன்றத்தை முடக்கும் நாடகங்களை விடுத்து ஆக்கபூர்வமாக செயல்படுமாறு எதிர்க்கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெற்றது. மக்களவை, மாநிலங்களவையில் மொத்தம் 27 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று (டிச.1) தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தொடர் 19-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.
இதில் அணுசக்தி மசோதா, இந்திய உயர்கல்வி ஆணையம், தேசிய நெடுஞ்சாலைகள் திருத்த மசோதா, கார்ப்பரேட் சட்டத் திருத்த மசோதா, பத்திர சந்தை குறியீடு மசோதா, மணிப்பூர் ஜிஎஸ்டி திருத்த மசோதா, அரசியலமைப்பு (131-வது திருத்தம்) மசோதா காப்பீட்டு திருத்த மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி கூறியதாவது: இந்தியா ஜனநாயக நாடு. ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை வலுப்பெற்று வருவதற்கான அடையாளம் தான் பிஹார் தேர்தல் வெற்றி. அதில் பெண்களின் பங்களிப்பு அளப்பரியது.
பிஹார் தேர்தல் தோல்வி தந்த அழுத்தத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் மீண்டு வர வேண்டும். வெற்றியின் ஆணவத்தையும், தோல்வியின் விரக்தியையும் வெளிப்படுத்தும் இடமல்ல நாடாளுமன்றம்.
எனவே, எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தை முடக்கி நாடகங்கள் நடத்துவதைத் தவிர்த்து, ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும். மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும். நாட்டுக்காக நாம் செய்ய வேண்டிய விஷயங்களைப் பற்றி விவாதிக்க வேண்டிய இடம்தான் நாடாளுமன்றம்.
நாட்டின் வளர்ச்சியே முதன்மையானது. நமது பொருளாதார வளர்ச்சி புதிய நம்பிக்கை தந்துள்ளது. இந்தக் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகளின் ஒத்துழப்பு மிகவும் அவசியம்.
கூட்டத்தொடரில், இளம் எம்.பி.க்கள், முதன்முறை எம்.பி.க்கள் அவையில் அதிகமாக பேச வேண்டும். அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
நான் டிப்ஸ் தருகிறேன்.. வழக்கமான அறிவுரைகளின் ஊடே பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளின் தொடர் தோல்வி முகத்தை கிண்டல் செய்யும் வகையில் சில கருத்துகளை முன்வைத்தார்.
அது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடி, “தேவைப்பட்டால் எதிர்க்கட்சிகள் சிறப்பாக செயல்பட நான் சில டிப்ஸ் தருகிறேன். அவற்றைக் கொண்டு அவர்கள் இன்னும் நல்ல உத்திகளை வகுத்து அதன்படி செயல்படலாம்.” என்று கூறினார்.