திருவண்ணாமலை
ஆரணி கொசப்பாளையம் வேதபுரீஸ்வரர் கோவில் தெருவில் அமைந்துள்ள பாலகுஜாம்பிகா சமேத வேதபுரீஸ்வரர் கோவிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேகத்திற்காக கோவில் அருகில் நவக்கினி யாக குண்டம் அமைக்கப்பட்டு புனிதநீர் நிரப்பப்பட்ட கலசங்கள் வைத்து சரவணன் சிவாச்சாரியார் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க 4 கால சிறப்பு யாக பூஜைகளை சிவாச்சாரியார்கள் நடத்தினர்.
இந்த பூஜைகள் நேற்று காலையில் நிறைவடைந்த நிலையில், பூஜிக்கப்பட்ட புனிதநீர் கலசங்களை மங்கள வாத்தியங்கள், சிவகண வாத்தியங்களுடன் கோவில் வலம் வந்து முகப்பு கோபுரம், கருவறை கோபுரம், அம்பாள் கோபுரம், விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட கோபுரங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
தொடர்ந்து சாமிக்கும் பரிவார சாமிகளுக்கும் புனிதநீர் ஊற்றி மகா அபிஷேகம் நடத்தப்பட்டது.
கும்பாபிஷேக விழாவில் எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி., சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி, நகரமன்ற துணைத்தலைவர் பாரி பி.பாபு உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சாமி திருக்கல்யாணம் உற்சவமும், இரவில் சாமி திருவீதி உலாவும் நடந்தது.