திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கம் வெளிநடப்பு!!

புதுடெல்லி:
திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கம் எழுப்பிய நிலையில், திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

திருப்பரங்குன்ற விவகாரம் தமிழகம் மட்டுமன்றி, நாடாளுமன்றம் வரை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் கூறிவரும் நிலையில், திருப்பரங்குன்ற மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் ‘தமிழகத்தில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க மதவாத சக்திகள் முயற்சி’ என ஒரு தரப்பினரும், ‘இந்துக்களுக்கு விரோதமாக செயல்படும் திமுக அரசு’ என்று இன்னொரு தரப்பினரும் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக்கோரி திமுக எம்.பி-க்கள் சார்பில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. திமுகவின் மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கினார்.

இதேபோல் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினார். இந்நிலையில், இரு அவைகளிலும் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் தொடர் முழக்கம் எழுப்பினர்.

ஆனால், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஒத்திவைப்பு நோட்டீஸை ஏற்க முடியாது என மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மறுத்ததால், திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி எம்பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.

மேலும், திருப்பரங்குன்ற விவகாரம் தொடர்பாக மக்களவையில் விவாதிக்க வேண்டும் என திமுக கூட்டணி கட்சி எம்பிக்கள் கோரிக்கை வைத்த நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா அதை மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *