பெங்களூரு:
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் மாணவர்கள் தினந்தோறும் கொடிய விலங்குகள் வாழும் காட்டுவழியாக உயிரை பணயம் வைத்து 7 கி.மீ. நடந்தே பள்ளிக்கு செல்லும் அவல நிலை உள்ளதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இப்பிரச்சினையில் மாநில அரசு உரிய தீர்வை காண வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது.
சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ளது பச்செதொட்டி கிராமம். இங்குள்ள குழந்தைகள் பள்ளி செல்வதற்கு உரிய சாலை வசதி இல்லாத காரணத்தால் தினமும் மகாதேஸ்வரா காட்டுப் பகுதி வழியாக 7 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டிய அவல நிலையில் உள்ளனர்.
பெற்றோர்கள் வேதனை: புலி, யானை, சிறுத்தை உள்ளிட்ட கொடிய விலங்குகள் இந்த காட்டில் அதிகமாக காணப்படுவதால் பள்ளி மாணவர்களின் உயிருக்கு உத்தர வாதமில்லாத நிலை காணப்படுவதாக பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கிராமத்துக்கு வரும் சாலைகள் மோசமாக பழுதடைந்துள்ளதால் பல மாதங்களாக போக்கு வரத்து தடைபட்டுள்ளது.
இது குறித்து அதிகாரிகளுக்கு பல முறை தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
எனவே இதுகுறித்து மாணவர்கள் முதல்வர் சித்தராமையாவுக்கும் கடிதம் எழுதி உள்ளனர்.
அதில், உரிய பேருந்து வசதி இல்லாததால் விலங்குகள் நிறைந்த காட்டு வழியாக தினமும் அபாயகரமான பயணத்தை பாதுகாப்பின்றி மேற்கொள்வதாக கவலை தெரிவித்துள்ளனர்.
உடனடியாக பேருந்து சேவையை தொடங்கி பாதுகாப்பை உறுதி செய்யும்படி முதல்வரிடம் மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.