காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்!!

காஞ்சீபுரம்,
பஞ்சபூத தலங்களில் நிலத்திற்கு உரியதாக போற்றப்படுகிறது காஞ்சீபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் கோவில்.

பழமையும், பெருமையும் வாய்ந்த இந்த கோவிலில் 29 கோடி ரூபாய் செலவில் பழமை மாறாமல் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

தற்போது இந்த பணிகள் முடிவடைந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேக விழா இன்று (திங்கட்கிழமை) கோலாகலமாக நடைபெற்றது. இன்று அதிகாலை 5.45 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் சன்னதி கோபுரங்களுக்கு புனித நீர் தெளித்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.

காலை 6.30 மணிக்கு மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. நண்பகல் 12 மணிக்கு மகா அபிஷேகமும் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு திருக்கல்யாணம் பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவும் நடைபெறுகிறது.

கும்பாபிஷேக விழாவையொட்டி ஏகாம்பரநாதர் கோவில் ராஜகோபுரம், ரிஷிகோபுரம் உள்பட கோபுரங்கள் அனைத்தும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

கோவிலில் மூலவர் நுழைவுவாயில் முன்பாக வண்ண வண்ண பூக்களால் தோரணங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

ரிஷி கோபுரத்தின் நுழைவுவாயில் பகுதியில் ‘காஞ்சீபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர்’ என வண்ண மலர்களால் எழுத்துகள் கோர்க்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.

யாகசாலையில் சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓத நேற்று எட்டாம் கால பூஜை விமரிசையாக நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் இருந்து வந்த 40-க்கும் மேற்பட்ட ஓதுவார்கள் பக்க இசைக்கருவிகளுடன் திருமுறை பாராயணம் பாடினார்கள்.

காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட போலீசார் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகம் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவின் தலைவர் எம்.வி.எம்.வேல்மோகன் தலைமையில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *